இலங்கையில் நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடனும்,சர்வதேச பங்காளிகளுடனும் கனடா அரசாங்கம் இணைந்து செயற்படும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்
கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஒட்டாவா தமிழ் சங்கம்,தேசிய தலைநகர் பிராந்திய தமிழ் சங்கம்,ஒட்டாவா தமிழ் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப அகடமி,ஒட்;டாவா தமிழ் மூத்தோர் சங்கம் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
கனேடிய தேசிய கீதத்துடன் பிரெட்பாரெட் அரங்கில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இனப்படுகொலையின் போது கொல்லப்ட்டவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் முள்ளிவாய்க்காலிலும் உயிரிழந்தவர்களிற்கு ஆழந்த இரங்கல்களை வெளியிட்ட கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த சங்கரிஒட்டவா நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர்பிழைத்தவர்கள் பிரசன்னமாகியிருப்பதாக தெரிவித்தார்.
அவர்களின் மீள் எழுச்சிதன்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு குறித்தும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் இலங்கைக்கான விஜயம் குறித்து தனது உரையில் குறிப்பிட்ட ஹரி ஆனந்தசங்கரி, அங்கு முள்ளிவாய்க்காலில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்து உரையாடியதாக குறிப்பிட்டார்.
வடக்குகிழக்கில் தமிழர்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்வதற்கும்,16 வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறப்படுவதையும் உறுதி செய்வதற்கும் உயிர்பிழைத்தவர்களின் குரல்களை ஒலிக்கச்செய்வதன் அவசியத்தை ஹரி ஆனந்தசங்கரி எடுத்துரைத்தார்.
நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடனும்,சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றும் கனடா அரசாங்கத்தின் நோக்கம் குறித்து குறிப்பிட்ட அவர், செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.