இந்தியா- பாகிஸ்தான் இடையில் தொடங்கிய போர், திடீரென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டினால் இடை நிறுத்தப்பட்டது.
பெரும் போராக மாறிக் கொண்டிருந்த மோதல்கள், திடீரென நிறுத்தப்பட்டது, இந்திய– – பாகிஸ்தான் மக்களுக்கு மாத்திரமன்றி, பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் கூட நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
பஹல்காமில், இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள இலக்குகளின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்களின் மூலம் இந்தியா தாக்குதல்களை நடத்தியது.
தமது இலக்கு பயங்கரவாத முகாம்கள் தான் என்றே முதலில் இந்தியா கூறியது.
அதையடுத்து, பாகிஸ்தானின் படைத்தளங்களை செயலிழக்கச் செய்யும் இலக்குடன் இந்தியா செயற்படத் தொடங்கியது.
அதையடுத்து பாகிஸ்தானும் பதிலுக்கு ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் கொண்டு, இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது.
இது தரப்பும் பெரும் தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்துவதற்கு இணங்கியிருப்பதாக அறிவித்திருந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், இந்திய- –பாகிஸ்தான் மோதல்களில், அமெரிக்கா தலையிடாது என்றும் அது தங்களின் வேலை இல்லை என்றும் கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறி 24 மணித்தியாலங்களுக்குள், இரண்டு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய இணங்கி இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
இந்தப் போரில் அமெரிக்கா தலையிடாது என்று கூறிவிட்டு, திடீரென ட்ரம்ப் ஏன் தலையீடு செய்து, போரை நிறுத்தினார் என்ற கேள்விக்கான சரியான பதில் இல்லை.
போர் அவசியமற்றது, என்பதில், மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், இந்தப் போர் விடயத்தில் ட்ரம்ப்பின் தலையீடும் சரி, இந்தியா–- பாகிஸ்தான் குறுகிய காலத்துக்குள் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டதும் சரி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
ஒப்பீட்டளவில், பாகிஸ்தானை விட, பலமான நிலையில் உள்ள நாடு இந்தியா.
சனத்தொகையும் சரி, படை பல ரீதியாகவும் சரி, இந்தியா வலுவானது.அதற்கு அப்பால், இந்தியாவின் அரசியல் தலைமைத்துவம் இன்னமும் வலுவானது.
அது, எந்த சவாலையும் எதிர்கொள்ள கூடிய அளவிற்கு பலமானதாக உள்ளது.
பாகிஸ்தானின் நிலைமை அப்படியல்ல, இப்போதைய பிரதமரும் சரி, ஏனைய தலைவர்களும் சரி, வலுவான தலைவர்கள் அல்ல.
இதற்கு முன்னர், இந்தியாவுடன் மல்லுக்கட்டிய ஜெனரல் ஷியா உல் ஹக், நவாஸ் ஷெரீப், ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பெனாஸிர் பூட்டோ, இம்ரான் கான் போன்றவர்களுடன் ஒப்பிடுகையில், இப்போதைய தலைமை பலவீனமானது.ஆனாலும், இந்தியாவை எதிர்க்கத் துணிந்தது பாகிஸ்தான்.
இந்தப் போரில் போலிப் பரப்புரை தீவிர தாக்கம் செலுத்தியது.
இன்றைய நவீன உலகில், போர்க்களத் தகவல்களை கணத்துக்கு கணம் பரிமாற முடியும். அதற்கு, சமூக ஊடக வசதிகள் இருக்கின்றன. அரசாங்கம் தகவல்களை வெளியிடும் வரைக்கும் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
எங்கேயோ இருக்கும் ஒருவர் சமூக ஊடகத்தில் ஒரு காணொளியையோ- தகவலையோ பதிவிட்டு விட்டால் அது உலகம் முழுவதற்கும் சென்று சேரும்.
இப்படியான நிலையில், போர் தொடங்கியதும் தாக்குதல்கள் தொடர்பாக போலிச் செய்திகளே அதிகம் பரவின.
சமூக ஊடகங்கள் முழுவதிலும், அந்த போலிச் செய்திகள், குப்பையாக குவிந்து கிடந்தன. எங்கேயோ, எப்போதோ நடந்த சம்பவங்களை இணைத்து, பயிற்சிகளின் போது எடுக்கப்பட்ட காணொளிகளையும் வீடியோ விளையாட்டுகளில் உள்ள காணொளிகளையும் இணைத்து, போலியான காணொளிகளும் படங்களும் வெளியிடப்பட்டன.
அவ்வாறு வெளியிடப்பட்ட போலி செய்திகள், தகவல்கள், பெரும்பாலும் இந்தியத் தரப்பினரால் வெளியிடப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.
பாகிஸ்தான் படைகளை துரத்தி விட்டோம், என்பது போல இந்தியாவின் பிரதான ஊடங்களும், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுடன் மக்களை முட்டாள்களாக்க முயன்றன.
போர்முனை உணர்வுபூர்வமான ஒரு இடம். அங்கு எப்போதுமே உண்மைக்கு இடம் இருப்பதில்லை.
ஆனால் இந்தப் போர்முனையில் தாக்குதல்கள் தொடர்பாகவும், இழப்புக்கள் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட பெரும்பாலான செய்திகள், தகவல்கள், படங்கள், காணொளிகள் எல்லாமே மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கம் கொண்டவைகளாக இருந்தன.
இந்தப் போர் தங்களுக்கு சாதகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது என மக்களை நம்ப வைப்பதற்காக, அதனை ஊக்குவித்த தரப்புகள் யார் என்று ஊகிப்பது கடினமல்ல.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இலக்குகள், படைத்தளங்களை தாக்கி அழித்ததாக, இந்தியா கூறியிருந்தாலும் அவை எல்லாம் உண்மையானவை என்று நம்ப முடியாது.
அந்த தாக்குதல்களில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியிருந்தாலும் அதுவும் கூட உண்மையானதா என்று எடுத்துக் கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம், பொதுமக்கள் இருக்கலாம், பாகிஸ்தான் படையினரும் இருக்கலாம்.
முதல் நாள் தாக்குதலின் போது, இந்தியாவின் இரண்டு ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் உரிமை கோரியது.
அதைவிட, மேலும் மூன்று மிக், போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக கூறியது. ஆனால் இந்தியா அதனை முதலில் மறுத்தது. தங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புக்களை இந்தியா இன்று வரை வெளியிடவேயில்லை.
இன்னமும் போர்ச் சூழல் மாறவில்லை என்று தெரிவித்துள்ள இந்தியா, இழப்புகளை விட இலக்குகள் தான் முக்கியமானவை என்றும், தளங்களை தாக்கி அழிப்பதில் இந்தியா வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறியிருக்கிறது.
தருணம் வரும்போது, இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடுவதாகவும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதிலிருந்து, இந்தியா உண்மையை மறைக்கிறது, தனக்கு ஏற்பட்ட இழப்புகளை வெளியிட விரும்பவில்லை என்பதை, தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
ரபேல் போர் விமானங்களை இந்தியா இழந்திருப்பதாக கூறப்படுவதில் உண்மை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தாக்குதலுக்குச் சென்ற தமது விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பியிருக்கின்றனர் என்று கூறிய இந்திய விமானப்படை பேச்சாளர், தமது விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக தளம் திரும்பியிருப்பதாக கூறவில்லை. எந்த விமானமும் பாகிஸ்தான் பக்கம் விழுந்து விடவில்லை.
அவை காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும், பஞ்சாபிலும் விழுந்திருக்கின்றன. அவை எத்தனை என்பதுதான் கேள்வி.
இந்தியா அதனை தருணம் வரும்போது வெளியிடுமா என்பது சந்தேகம்.
ரபேல் போர் விமானங்களில், இந்தியா அண்மையில் பெருமளவில் முதலீடு செய்தது. அந்த விமானங்கள் விழுந்து நொறுங்கினால், இந்திய மக்களின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
இந்திய மக்களின் மன உறுதியை அது உடைக்கும், அதனால் இந்தியா இதுபோன்ற தகவல்களை மறைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
பாகிஸ்தானும் இதேபோன்ற ஒளிப்பு, மறைப்புகளில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
இந்தப் போர் தீவிரமான கட்டத்தை அடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
திடீரென பாகிஸ்தான் தேசிய கட்டளை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டியது.
இது அணுசக்தி ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கான குழுவாகும்.
இதன் பின்னரே அமெரிக்காவின் தலையீடு உறுதியானது, ட்ரம்ப் தலையீடு செய்து இரண்டு நாடுகளையும் அமைதிப்படுத்த தீர்மானித்தார்.
ஆனால், இந்த தலையீட்டை இந்தியத் தரப்பு விரும்பியதாக தெரியவில்லை.
அதனால் தான் போர்நிறுத்த அறிவிப்பை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக உண்மையில் அறிவித்திருக்க வேண்டியது இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் தான்.
ஆனால், அமெரிக்காவே இந்த தீர்மானத்தை அறிவித்தது
இந்த போர் நிறுத்தம் அரசியல் தலைவர்களின் உடன்பாட்டின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று அல்ல.
இராணுவ மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலானது.
போரை நடத்துவதற்கு இரண்டு நாடுகளும் இராணுவத்துக்கு அதிகாரத்தை கொடுத்திருந்தன.
அதேபோல போரை நிறுத்துவதற்கும் தவிர்க்க முடியாதபடி இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
இல்லாவிட்டால், போர் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும்.
போர் நிறுத்தத்துக்கு இணங்காமல் போயிருந்தால் அழுத்தங்கள் அதிகரித்திருக்கும்.
இந்தப் போர் இடைநிறுத்தப்படும் அறிவிப்பு வெளியானதும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
உண்மையில் இந்தப் போரினால் அதிகம் சிக்கலை எதிர்கொண்டவை, இலங்கை போன்ற நாடுகள் தான்.
அவை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நாட்டை சார்ந்திருந்தன.
இலங்கை இரண்டு நாடுகளுக்கும் சார்பில்லை, நாங்கள் நடுநிலை என்று தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தது.
இந்த நடுநிலை நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய ஒன்று அல்ல.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் முழு அளவிலான போர் தொடங்கியிருந்தால், இரண்டு நாடுகளிடம் இருந்தும், இலங்கை கடும் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கும்.
அந்த அழுத்தங்களில் இருந்து, இலங்கையை காப்பாற்றியிருக்கிறது போர்நிறுத்த உடன்பாடு.
அதனால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போர் நிறுத்தத்தை வரவேற்றிருக்கிறார். இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் தொடர் கிறது. அது நீடிக்கும் வரை இலங்கை நிம்மதியாக இருக்கப் போவதில்லை.
-ஹரிகரன்-