“திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க கடந்த மாதத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிசை மேலாண்மை முறையால் எத்தனை பேர் வந்தாலும் மிகத் துல்லியமாக தரிசனத்திற்கு விரைவாகச் செல்ல முடிந்தது.
இந்த அமைப்பின் மூலம் பக்தர்கள் அதிகம் உள்ள இடங்கள், எந்தெந்தப் பகுதிகள் காலியாக உள்ளன என்பதை அடையாளம் கண்டு பக்தர்களை விரைவாக தரிசனம் செய்ய வைத்தனர்.
கடந்த மாதம் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 21.08 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.
கடந்த ஆண்டுகளை விட ஜூன் மாதத்தில் ரூ.120.35 கோடி காணிக்கையாக கிடைத்தது.
இது கடந்த ஆண்டு ரூ.110 கோடியாக இருந்தது. கடந்த ஜூன் 30-ந்தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.30 கோடி வசூலானது.
119 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 10 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் தரிசன சேவை, அபிஷேக சேவை வழங்குவதாக உறுதியளித்து ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களிடமிருந்து பக்தர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பெடிண்டி பிரபாகச்சாரியுலு என்ற பெயரில் வைணவ யாத்ராஸ் பேஸ்புக் பக்கத்தை நடத்தும் ஒருவர் ஆர்ஜித சேவை, அபிஷேகம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்குவதாக விளம்பரப்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற போலியான சமூக வலைத்தளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம்.திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதியில் நேற்று 76,126 பேர் தரிசனம் செய்தனர்.
24,720 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.97 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.”,