எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாறாக எதிரணியை ஆளுங்கட்சி குறிவைக்கவில்லை. அதற்கு எமக்கு நேரமும் கிடையாது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனநாயகத்துக்கு  அச்சுறுத்தலா..

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல கட்சி முறைமை மற்றும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என எதிரணி தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு எங்கு, எவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை எதிரணி விளக்கினால் நல்லது.

தராதரம் பராது சட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துவதற்குப் பெயர்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்பதா? பல கட்சி ஆட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாம்.

எதிரணியில் உள்ள பல கட்சிகள் ஒன்றிணைவதுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாகும். எனவே, பல கட்சி முறைமையை எதிரணிதான் நாசமாக்கியுள்ளது. தமது கட்சியை பாதுகாத்து அதனை வலுப்படுத்துவதற்கு எதிரணிகளால் முடியாமல்போயுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க ஆளுங்கட்சியை குறைகூறுவது ஏற்புடையது அல்ல. நாம் எதிரணியைக் குறிவைக்கவில்லை. அதற்கு நேரமும் கிடையாது. ஏனெனில் மக்களுக்கான சேவையே எமக்கு முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்

Share.
Leave A Reply