பள்ளி மாணவனை விரட்டிவிட்டு, அவருடன் வந்த மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில், போக்சோ பிரிவில் கைதாகியிருக்கும் காவலரின் வக்கிரச் செயல்கள் பதறவைக்கின்றன!

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் டூ படிக்கும் மாணவர் சந்தோஷ்குமார்.

அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கயல்விழி (இருவர் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன).

இருவரும், ஒருவரையொருவர் காதலித்து வந்திருக் கின்றனர். இந்த நிலையில், 5-11-2025 அன்று வழக்கம்போலப் பள்ளிக்குச் சென்ற இருவரும், மாலை வீடு திரும்பாமல் மாயமானார்கள்.

பதறிப்போன மாணவியின் பெற்றோர், ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மாயமான சிறுமி கயல்விழியைத் தேடிவந்தனர்.

``இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?’’

மறுநாள் 6-ம் தேதி அதிகாலை, சென்னை – திண்டிவனம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சந்தோஷ்குமாரையும் கயல்விழியையும் நிறுத்திய காவலர் ஒருவர், அவர்களிடம் விசாரணை செய்திருக்கிறார்.

அப்போது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். `

`இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?’’ என்று அட்வைஸ் செய்த அந்தக் காவலர், சந்தோஷ்குமாரை மட்டும் வீட்டுக்குப் போகும்படி கூறிவிட்டு,

`‘காவல் நிலையம் வரை நீ வந்து செல்ல வேண்டும்’’ என்று கூறி மாணவியைத் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்.

சில மணி நேரத்தில், தன் பெற்றோருக்கு போன் செய்த அந்த மாணவி, ‘காவலர் ஒருவர் தன்னை மிரட்டிப் பாலியல் ரீதியில் கொடுமை செய்ததாக’ கதறி அழுதிருக்கிறார்.

இதையடுத்து, கயல்விழி சொன்ன இடத்துக்குச் சென்று அவரை மீட்ட பெற்றோர், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில், நடைபெற்ற விசாரணையில், மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் 38 வயது இளங்கோ என்பதும் சொந்த ஊர் மயிலம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் இளங்கோவை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன்.

`அப்பா மாதிரினு சொல்லிட்டுஇப்பிடிப் பண்றீங்களே..?

’சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை அதிகாரிகள் நம்மிடம் பேசியபோது, “ஒரே ஊரைச் சேர்ந்தவர்களான சந்தோஷ்குமாரும் கயல்விழியும் காதலித்துவந்திருக்கின்றனர்.

5-ம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்னைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து 6-ம் தேதி அதிகாலை ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது, திண்டிவனம் மன்னார்சாமி கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் இளங்கோ, அவர்களை நிறுத்தி விசாரித்திருக்கிறார்.

அப்போது அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் வந்திருப்பது தெரியவந்ததும், வக்கிரமாக யோசித்திருக்கிறார் இளங்கோ

.உடனே, `கயல்விழியைக் காவல் நிலையத்துல ஒப்படைக்கணும். நீயும் கூட வந்தா உன் மேலயும் கேஸ் போடவேண்டி வரும். நீ ஜெயிலுக்குப் போயிடுவ. அதனால நீ போயிடு’ என்று இளங்கோ சொல்ல, அங்கிருந்து கிளம்பியிருக்கிறான் சந்தோஷ்குமார்.

பயந்து நின்ற கயல்விழியிடம், `நான் உன் அப்பா மாதிரிம்மா. பயப்படாம என்கூட வா’ என்று சொல்லி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார் இளங்கோ.

சிறிது தூரம் சென்றதும் இருட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்திய இளங்கோ, கயல்விழியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

`அப்பா மாதிரினு சொல்லிட்டு இப்பிடிப் பண்றீங்களே… இது நியாயமா… என்னை விட்ருங்க…’ என்று கெஞ்சி அழுதிருக்கிறார் கயல்விழி.

அப்போது, `காதல் பண்றீங்க… இதெல்லாம் நீங்க பண்ணாமலா இருந்திருப்பீங்க. சும்மா நடிக்காத. சொல்றதைக் கேளு’ என்று மிரட்டியபடி தன் அத்துமீறலைத் தொடர்ந்திருக்கிறார் இளங்கோ.

ஒருகட்டத்தில், கயல்விழி சத்தம் போட்டு கத்திக் கதறி அழுததால், பயத்தில் அவரை அங்கேயே விட்டுவிட்டு `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார் இளங்கோ.

இதற்கிடையே, வீட்டுக்குச் செல்வதைப்போலச் சென்ற சந்தோஷ்குமார், இளங்கோவைப் பின்தொடர்ந்து வந்திருந்ததால், அழுது கொண்டிருந்த கயல்விழியை மறுபடியும் சென்னைக்கே அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கிருந்துதான் தன்னுடைய பெற்றோருக்கு போன் செய்து கதறியிருக்கிறார் கயல்விழி. அதன் பிறகு அவரின் பெற்றோருடன் சென்னைக்குச் சென்ற நாங்கள், கயல்விழியை மீட்டு வந்தோம்.

அப்போது அவர்கள் சொன்ன தகவலின்படிதான், இளங்கோவைக் கைது செய்து விசாரித்தோம். `நான் எந்தத் தப்பும் செய்யவில்லை’ என்று மழுப்பிய இளங்கோவிடம்,

‘பிறகு ஏன் அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை..?’ என்று நாங்கள் எழுப்பிய கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

அதன் பிறகுதான் அவரைக் கைதுசெய்தோம்” என்றனர்.

இப்படியான வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதன் மூலமே காவல்துறை தன்மீதான கறைகளைத் துடைத்துக்கொள்ள முடியும். செய்யுமா… தமிழ்நாடு காவல்துறை?

Share.
Leave A Reply