தாவூத் இப்றாஹிம் கும்பலுக்கும் தோற்கடிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் எஞ்சியுள்ள உறுப்பினர்களுக் குமிடையே, புதிய கூட்டணி உருவாகியுள்ளமை குறித்து இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பெரும் இழப்புகளைச் சந்தித்த விடுதலைப்புலிகள், தற்போது தென்னிந்திய மற்றும் இலங்கை வழித்தடங்களை போதைப்பொருள் வர்த்தகத்தை விரிவுபடுத்த பயன்படுத்தி வருவதாகவும் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் கடத்தல் வலையமைப்பில் நீண்டகால அனுபவமுள்ள தாவூத் இப்றாஹிம் கும்பலுக்கு எதிராக,சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த இந்தியாவின் சில வட மாநிலங்கள் சில, தீர்மானித்துள்ளன.மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற வட மாநிலங்களில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில்,தமிழ்நாடு மற்றும் இலங்கையில் எஞ்சியுள்ள புலிகளின் பழைய வலையமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் அமைப்பினர் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

போதைப்பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கே, இந்த அமைப்பு புதிய தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய புலனாய்வுப் பிரிவினரால் இடைமறிக்கப்பட்ட தகவல் தொடர்புகள் மூலம் இந்த விடயம் வௌிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தொடர்புகள், ஒரு காலத்தில் எல்.டி.டி.ஈ.யின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய கடல் மற்றும் நில வழிகளை அணுக இவர்களுக்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித் தேவைகளின் நிமித்தம் முன்னாள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்த சிலர்,இவ்வாறு தாவூத் இப்றாஹிம் அமைப்புடன் தொடர்புகளை ஆரம்பித்துள்ளனர்.

புலிகளின் செயற்பாடுகள் உச்சகட்டத்தில் இருந்த காலமான 1980 ஆம் ஆண்டிலிருந்து இத்தொடர்புகள் ஏற்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எல்.டி.டி.ஈ.யுடன் தொடர்புடைய செயற்பாட்டாளர்கள், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்த முயன்றதை இந்திய அமைப்புகள் முறியடித்தன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரேஷ் ராஜ் மற்றும் சௌந்தரராஜன் என அடையாளம் காணப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மற்றும் தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களின் உத்தரவின் பேரில்,இவர்கள் செயற்படுவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version