சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுமதியின்றி தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி பேஸ்புக் பக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் முறைப்பாடளித்தவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் பல பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி இதுபோல ஏராளமான பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியது அம்பலமானது.

அத்துடன் ஒவ்வொரு பக்கத்திலும் 10,000 முதல் 20,000 பின்தொடர்பவர்களை சேர்ந்தவுடன், குறித்த பக்கத்தை 1,000 ரூபா முதல் 2,000 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்திருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர் பத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்கள் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க உத்தரவிட்டார்.

எனினும், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் சந்தேகநபரின் செயற்பாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றும், அவர் இதேபோன்ற மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டால் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Share.
Leave A Reply