நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சுமார் 310 நபர்கள் எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதாகவும் அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூறைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த 310 நபர்கள் கடந்த இரண்டு நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி இருக்கின்றார்கள்.மேலும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சிலரை படகுகள் மூலம் மீட்டுள்ளோம்.

மேலும் கூராய் பிரதேசத்தில் 36 நபர்கள் எவ்வித தொடர்புகளும் இன்றி மரத்திலும்,கூரைகள் மேலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர்,விமானப்படையினர் மற்றும் ஏனைய அரச அலுவலகர்களின் உதவியுடன் மீட்க முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். கடற்படையினரால் மீட்பிற்காக சென்ற படகு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளமையினால் பாதிக்கப்பட்ட மக்களை நெருங்குவதில் கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக விமானப்படையின் உதவியையும் பெற்றுக் கொள்ள கஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி மீண்டும் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை சீரான நிலைக்கு வரும் சந்தர்ப்பத்திலேயே மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.மேலும் மாந்தை மேற்கு,மடு,முசலி பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசிகள் இயங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான பாதைகளும் தடைப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply