தொடர்ச்சியான மழை காரணமாக களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், ஹன்வெல்ல மற்றும் அதன் கீழ் பகுதிகளில் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு நிலைமை (Major Flood Situation) ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
ஹன்வெல்ல அளவீட்டு நிலையம்: இங்கு நீர்மட்டம் 9.78 மீட்டர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ‘பாரிய வெள்ள நிலைமைக்கு’ மிக அருகில் உள்ள அபாயகரமான மட்டம் ஆகும்.
-
நாகலகம் வீதி அளவீடு: நாகலகம் வீதிகளில் நீர்மட்டம் 8.35 அடியாகக் காட்டப்பட்டுள்ளது. இது சமீபத்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த நீர் மட்டம் ஆகும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
-
வெள்ள அணை நிலை: களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணை தற்போது எதிர்பார்க்கப்பட்ட அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ளது.
நீர் மட்டம் இப்போதைக்கு அதே மட்டத்தில் நீடிக்கும் என்றும், மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆபத்தான பகுதியை அண்டியுள்ள பொதுமக்கள் வெள்ள எச்சரிக்கை அறிவித்தல்களைக் கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் நிலைமையைப் பார்வையிட அந்தப் பகுதிகளுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

