நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த அல்லது நோய்வாய்ப்பட்ட கால்நடைகளின் இறைச்சியை விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் முக்கியத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டப் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இன்று (டிசம்பர் 3, 2025) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
-
தடைக்கான காரணம்: உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக, வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
-
அதிகாரபூர்வ நடவடிக்கை: மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்தத் தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
-
உத்தரவை மீறி இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
-
பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளைக் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னார் சௌத்பார் கடற்கரையில் கால்நடைகள் மீட்பு மற்றும் அடக்கம்
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் நேற்று மாலை கரையொதுங்கின.
-
மீட்பு மற்றும் அடக்கம்: கடற்கரையில் பாரிய துர்நாற்றம் வீசிய நிலையில், மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலமையில், நகர சபை பணியாளர்களின் உதவியுடன் கரையொதுங்கிய மாடுகள் மீட்கப்பட்டன. பின்னர், கடற்கரைப் பகுதியிலேயே பாரிய பள்ளம் தோண்டப்பட்டு, உயிரிழந்த மாடுகள் புதைக்கப்பட்டன.

