பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன் மனிதாபிமான உதவி நிவாரணப்பொருட்களை ஏற்றிய சீன விமானம் திங்கட்கிழமை (8) நாட்டை வந்தடைந்தது.
‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் சீனா அரசாங்கம் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியையும்,
10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களையும் வழங்கியுள்ளது.
அதுமாத்திரமன்றி சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

