பின்னணிப் பாடகி சின்மயி, பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஒருவரின் மார்பிங் புகைப்படத்தை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்தவர்களுக்கு எதிராகக் காவல்துறையில் நேரடியாகப் புகாரளித்தார்.
இதற்குப் பதிலடியாக, அதே எக்ஸ் பக்கத்தில் சின்மயியின் மார்பிங் மற்றும் ஏஐ (AI) புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரை மோசமாக விமர்சித்துள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சின்மயி, அந்தப் பதிவைச் செய்தவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து, சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவில் காட்டமாகப் பேசியுள்ளார். “பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் ஆணாதிக்க சமூகத்தில் உள்ளது. அவர்களை எதிர்த்துப் பேசும் பெண்களை ஏஐ மூலம் மார்பிங் செய்து சித்தரிக்கிறார்கள். இந்தக் குரூர புத்திக்கொண்ட அயோக்கியர்களுக்கு எதிராக நாம் தைரியமாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

