நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களால் ரயில்வே திணைக்களத்தின் சொத்துக்களுக்கு (தண்டவாளங்கள், பாலங்கள், நிலையங்கள் உட்பட) 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான ரயில் சேவையை எப்போது மீள ஆரம்பிப்பது என்று குறிப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, மாத்தளை – கண்டி ரயில் பாதைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ரம்புக்கனை, பொல்காஹெவல வரையான சேவைகள் புனரமைக்கப்பட்டு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மலையக ரயில் பாதை சேதத்தை மதிப்பிட மேலும் 2 மாதங்கள் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

