தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று (டிசம்பர் 11) சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்குகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஆஸ்கரில் இருந்து 14 படங்கள், கேன்ஸ்சில் இருந்து 6 படங்கள் உட்படப் பல விருதுப் படங்கள் இடம்பெறுகின்றன. தமிழில் இருந்து ‘3BHK’, ‘காதல் என்பது பொதுவுடைமை’ உட்பட 12 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. மேலும், ரஜினிகாந்தின் 50 வருட திரைப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில், அவரது சூப்பர்ஹிட் திரைப்படமான ‘பாட்ஷா’ சிறப்புத் திரையிடலாக இடம்பெறுகிறது. மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

