அனர்த்த நிவாரண நிதியை பெறுவோரின் முழுமையான விபரங்களும் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விவரத்தைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அனர்த்த நிவாரண நிதிகளில் மோசடிகள் நடைபெறாமல் இருக்க, நிதி பெறும் பயனாளர்களின் பெயர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு காட்டுவது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
பேரிடர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, சமீபத்திய மழை, நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படுமானால், தனக்கும் அந்த உரிமை உள்ளதாகவும் நினைவூட்டினார். ஏனைய உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களுக்கு தானும் உரித்துடையவர் என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மதுபான உரிமக் கட்டண அதிகரிப்பு தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

