உலகம் முழுவதும் Super Flu என அழைக்கப்படும் புதிய வகை ப்ளூ வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. சாதாரண ப்ளூ அல்லாமல், மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் என்பதால் இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
Influenza A (H3N2) வகை வைரஸால் ஏற்படும் இந்த புதிய ப்ளூ தொற்று, பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பல நாடுகளில் வழக்கத்தைவிட சீக்கிரமாகத் தொடங்கியுள்ளது. அதேபோல் தெற்குப் பகுதிகளில், ப்ளூ பருவம் வழக்கத்தைவிட நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. இது இந்த வைரஸில் நிகழ்ந்த மரபணு மாற்றத்தின் விளைவு என்று WHO தரவுகள் தெரிவிக்கின்றன.
WHO வெளியிட்ட அறிக்கையில், இந்த Super Flu வைரஸ் கொள்ளை நோயாக (Pandemic) மாறக்கூடிய திறன் கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது. வைரஸ் மாற்றமடைந்தாலும், தற்போது பயன்பாட்டில் உள்ள ப்ளூ தடுப்பூசிகள் மனிதர்களுக்கு முக்கிய பாதுகாப்பை வழங்கும் என்பதால், நாடுகள் அனைத்தும் அவசியம் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல நாடுகளில் இந்த தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார நிபுணர்கள் மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணியவும், காய்ச்சல் அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகவும் அறிவுறுத்துகின்றனர்.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த புதிய Super Flu குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக WHO தெரிவித்துள்ளது.

