உக்ரேன் போர் நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜோ பைடன் காலத்தில் ஆரம்பமான இந்தப் போர், ட்ரம்ப் காலத்திலும் முடிவடையாது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 24 மணி நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர உள்ளதாக ட்ரம்ப் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கள யதார்த்தத்தை உணராத ட்ரம்பின் வாக்குறுதி எதனால் சாத்தியமற்றுப் போனது என்பதற்கான காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததே.

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோரை ட்ரம்ப் நேரில் சந்தித்துப் பேசிய பின்னரும் கூட போர் தொடர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் தடுத்து விடுவதில் ஐரோப்பிய நாடுகள் சில தொடர்ந்து மேற்கொண்டுவரும் நகர்வுகள் இதுவரை வெற்றியளித்து வந்துள்ளன.

அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து 28 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை முன்வைத்துள்ள நிலையில், அது தொடர்பிலான பேச்சுக்கள் அமெரிக்க மற்றும் உக்ரேன் பிரதிநிதிகளுக்கு இடையில் ஜெனிவா நகரிலும் அமெரிக்காவின் புளோரிடாவிலும் நடைபெற்று உள்ளது. சரியாகச் சொல்வதானால் பந்து தற்போது ஸெலென்ஸ்கியிடமே உள்ளது. அவர் எடுக்கப்போகும் முடிவிலேயே இந்தப் போரின் எதிர்காலம் தங்கியுள்ளது.

ஸெலென்ஸ்கியின் நிலை தற்போது பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. போர்க் களத்தில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் உக்ரேன்; படைகள் மறுபுறம் ஆள் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகின்றன. களத்தில் மடிவோர் ஒருபுறம், படைகளை விட்டோடுவோர் மறுபுறம், இது தவிர புதியவர்களைப் படையில் சேர்க்கும் விடயத்தில் நெருக்கடி என அனைத்து முனைகளிலும் அரசாங்கம் பின்னடைவையே சந்தித்து வருகிறது.

படையில் இணைவோருக்கான வயதெல்லையைக் குறைத்தும், பலவந்தமாகப் படையில் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்ற போதிலும் அரசாங்கத்தினால் தான் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள முடியாமல் உள்ளது.

ஊழலில் உலக சாதனை படைக்கும் உக்ரேன் அரசாங்கம் மீண்டும் ஒரு பாரிய ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளது. இறுதியாகக் கண்டறியப்பட்ட பிரமாண்ட ஊழல் குற்றச்சாட்டில், ஸெலென்ஸ்கியின் நெருங்கிய சகாவும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உக்ரேன்; தரப்பைத் தலைமை தாங்கியவருமான அந்திரி யெர்மக் சிக்கி பதவியைத் துறக்கும் நிலை உருவாகி உள்ளது. நூறு மில்லியன் அமெரிக்க டொலர் ஊழலில் இவர் சிக்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஊழல் விவகாரம் ஸெலென்ஸ்கியைப் பொறுத்தவரை மிகப் பாரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

மறுபுறம், உக்ரேனின் படை நடவடிக்கைகளுக்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்குவதற்கு அமெரிக்கா பின்னிற்பது மற்றொரு பின்னடைவாக உள்ளது. அது மாத்திரமன்றி, உத்தேச சமாதான உடன்படிக்கையில் அமெரிக்கா வழங்குவதாக உள்ள பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு அமெரிக்கா உக்ரேனிடம் இருந்து பணத்தை அல்லது அதற்கு நிகரான தொகைக்கு அரியவகை கனிம வளங்களை உக்ரேனிடம் இருந்து எதிர்பார்க்கிறது. அத்தோடு அமெரிக்கா செலவிட உத்தேசித்துள்ள தொகைக்கு நிகராக, உக்ரேனின் நட்பு நாடுகளிடம் இருந்தும் சமமான தொகையையும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

உத்தேச திட்டத்தில் உள்ளவாறு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப் பிரதேசத்தை ரஷ்யாவிடம் வழங்குவது உக்ரேனுக்கும், அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கும் ஏற்புடைத்ததாக இல்லை என்பது தெரிகிறது. கள நிலவரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அவை உள்ளது போலவே தெரிகின்றது. ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை உக்ரேன்; போரில் ரஷ்யாவின் கரங்கள் மேலோங்கி உள்ளதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளமை வெளிப்படையாகப் புலப்படுகின்றது.

போர்க் களத்தில் ரஷ்யப் படைகள் தினமும் முன்னேறிச் செல்வதைப் பார்க்க முடிகின்றது. பல்வேறு முனைகளிலும் ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் தொடர்பிலான செய்திகள் நாளாந்தம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய செய்திகளைத் திட்டமிட்டு மறைப்பதற்கு உக்ரேன்; தரப்பு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தோல்விகண்டு வருவதையும் ஒருபுறம் பார்க்க முடிகின்றது.

எந்தவொரு போரிலும், கள நிலவரத்தைச் சரியாகக் கணித்து, இரண்டு தரப்பும் மனம்விட்டுப் பேசி எட்டப்படும் தீர்வுகளே நிலையானதாக இருக்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில் தீர்வு நோக்கி உக்ரேனை பலவந்தமாகத் தள்ளுவதாகவே கள நிலவரமும், அமெரிக்காவின் முயற்சிகளும் உள்ளதாகத் தெரிகின்றது. உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் தனது செல்வாக்கைப் பெரிதும் இழந்துள்ள ஸெலென்ஸ்கி அமெரிக்காவின் நகர்வுகளைப் புறந்தள்ளிவிட முடியாத கையறு நிலையிலேயே உள்ளார் என்பதே யதார்த்தம். இந்த நிலையில், உக்ரேன் மீது திணிக்கப்படும் தீர்வு(?) நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஜெனிவா மற்றும் புளோரிடாவில் உக்ரேன்; மற்றும் ரஷ்ய ராஜதந்திரிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஸ்ரீவ் விட்கோவ் ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக ரஷ்யத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா உரிமை கோரும் பிரதேசங்களை ரஷ்யாவுக்கு விட்டுத் தருதல், நேட்டோவில் இணைவதற்குச் சம்மதம் தெரிவிக்காமை, படையினரின் எண்ணிக்கைiயை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு உள்ள அம்சங்களை உக்ரேன்; பாதகமாகக் கருதுகிறது.

இதே அம்சங்களே ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருத்தமற்றவையாகத் தோன்றுகின்றன. ரஷ்யாவைத் தோற்கடிக்கும் வரை போர் தொடர வேண்டும் என்பதே அந்த நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது. அது சாத்தியமாகுமா? அதனால் உக்ரேன்; தரப்பில் எத்தனை மனித உயிர்கள் பலியாகக் கூடும் என்பது பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாதவர்களாக அந்த நாடுகளின் தலைவர்கள் அன்றாடம் பேசி வருவதைப் பார்க்க முடிகின்றது. அது மாத்திரமன்றி, புதிய தீர்வுத் திட்டம் ரஷ்யாவுக்கே சாதகமாக இருப்பதாகவும் அவர்கள் தொடரந்து கூறி வருகின்றனர்.

ஆரம்பம் முதலே ரஷ்யா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து வருகின்றது. தனது எல்லையோரம் நேட்டோ விரிவாக்கம் நடப்பதைத் தடுப்பது, நாஸிசக் கோட்பாட்டுடன் கூடிய, ரஷ்ய விரோத அரசாங்கம் ஒன்று உக்ரேனில் பதவியில் தொடர்வதற்கு அனுமதி மறுப்பது, உக்ரேனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் பிரஜைகளின் நலன்களைக் காப்பது உள்ளிட்ட விடயங்களுக்காக உலகையே எதிர்த்து நிற்பதற்கும் ரஷ்யா தயாராக உள்ளது. 28 அம்சத் தீர்வுத் திட்டத்தை இந்த அடிப்படையிலேயே பரிசீலனைக்கு எடுப்பதற்கு ரஷ்யா முன்வந்து உள்ளது.

உக்ரேனின் தற்போதைய அரசுத் தலைமை மீது ட்ரம்ப் மிகுந்த அவநம்பிக்கையுடனும், விசனத்துடனும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தனது அவநம்பிக்கையை அவர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளை இணைத்துக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை என்பதையும் பார்க்க முடிகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

உக்ரேன்; போர் முடிவுக்கு வருவதை உலகின் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதற்கான அடித்தளம் இடப்பட்டு விட்டது. ஆனால், ஒரு தீர்வை எட்டுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது ரஷ்யா மற்றும் உக்ரேன்; ஆகிய இரு தரப்புகளின் நேர்மையான பேச்சுக்கள், விட்டுக் கொடுப்பு என்பதிலேயே தங்கி உள்ளது. எதிர்கால சந்ததிகளின் நன்மையைக் கருதி இதய சுத்தியுடன் பேச்சுக்களை நடத்தும் உறுதிப்பாட்டுடன் இரு தரப்புகளும் ஈடுபாடு காட்டினால் தீர்வு வரலாம். வர வேண்டும். வருமா என்பதே தற்போது உள்ள பெறுமதியான கேள்வி.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Share.
Leave A Reply