அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள் தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரைக் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க தொடர்ந்து மெனக்கெடுகிறது.

அவர்களைச் சேர்க்க முடியாது என்பதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

ஆனாலும், தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் முக்குலத்தோர் சமூகத்தினரின் செல்வாக்கு அதிகம் என்பதால், அந்த மூவரையும் எப்படியாவது உள்ளே கொண்டுவந்துவிட வேண்டுமென்று பா.ஜ.க தொடர்ந்து முயற்சி செய்கிறது.

ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா ஆகியோரைப் பொறுத்தளவில், மூன்று பேருக்கும் வெவ்வேறு விதமான நோக்கங்கள் இருக்கின்றன.

சசிகலா, எப்படியாவது அ.தி.மு.க-வுக்குள் போய்விட்டால் போதும் என்று நினைக்கிறார். அ.தி.மு.க-வுக்குள் போய் மீண்டும் ஒருங்கிணைப்பாளராக ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் ஓ.பி.எஸ்ஸுக்கு இருக்கிறது.

தினகரனைப் பொறுத்தமட்டில், ‘எடப்பாடி பழனிசாமி வேண்டாம். முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமியைச் சொல்கிற எந்த அணியிலும் நான் இருக்க மாட்டேன்’ என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

இது தவிர, கட்சியைக் கைப்பற்ற வேண்டும்… துரோகியை வீழ்த்த வேண்டும் என்பது தினகரனின் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது.

இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி நிலையிலிருந்து பார்த்தால், இவர்கள் யாருமே வேண்டாம் என்று நினைக்கிறார். கூட்டணியில் அவர்களைச் சேர்த்துக்கொள்வதில் அவருக்குத் துளியும் உடன்பாடு இல்லை.

முன்னாள் அமைச்சர்கள் சென்று சொன்னபோதுகூட, அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சசிகலாவும், தினகரனும் உள்ளே வந்துவிட்டால், கூடாரத்துக்குள் ஒட்டகம் தலையை நுழைத்து, பிறகு மொத்த கூடாரத்தையும் காலி செய்யும் நிலை வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறார்.

தற்போது, தனது தலைமையில் இருக்கும் அ.தி.மு.-வை அவர்கள் வந்தால் கைப்பற்றிவிடுவார்கள் என்ற பயம் அவருக்கு இருக்கிறது.

ஆகவேதான், அவர்களை எக்காலத்திலும் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தின்போது, சிலர் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, ‘எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டும். அப்போதுதான் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். தி.மு.க என்ற தீயசக்தியைத் தோற்கடிக்க முடியும்’ என்று பேசியிருக்கிறார்கள்.

மேலும், இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு, ‘அவர்களைச் சேர்த்தால், முன்பு எப்படி இருபது ஆண்டுகளாக அவர்களுக்கு அடிமைகளாக இருந்தோமோ, அதுபோன்ற கதிக்கு மீண்டும் நாம் ஆளாவோம்’ என்பது அவரது பதிலாக இருந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, ‘யார் யாருக்கெல்லாம் அடிமையாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் சசிகலாவிடமும், தினகரனிடமும் போய்ச் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆகவே, எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

அதன் பிறகு, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்று சசிகலாவையும், தினகரனையும், ஓ.பி.எஸ்ஸையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, ‘தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் பரவாயில்லை. நான் அவர்களைச் சேர்ப்பதாக இல்லை.

ஏனென்றால், அவர்கள் உள்ளே வந்தால் கட்சியை என்னிடமிருந்து கபளீகரம் செய்துவிடுவார்கள்’ என்று நயினார் நாகேந்திரனிடம் கறாராகக் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

மேலும், ‘இந்த மாதிரி எனக்கு அழுத்தம் கொடுத்தீர்கள் என்றால், பா.ஜ.க கூட்டணியை முறித்துக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

சசிகலாவும், தினகரனும் உள்ளே வந்தால், எப்படியாவது நம்மைக் கவிழ்த்துவிடுவார்கள்… அவர்களின் குடும்பத்துக்கு நம்மை அடிமையாக்கிவிடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்களோ, ‘இவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுதானே நாம் உழைக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால், நம் கட்சியைப் பலப்படுத்த வேண்டியது முக்கியம் இல்லையா… இவர் முதலமைச்சர் ஆகிவிட்டால், என்ன பிரச்னை வந்தாலும் எளிதாக டீல் செய்துவிடலாமே. பிறகு ஏன் இவர் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்’ என்று கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் அ.தி.மு.க சீனியர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

எப்படியாவது சசிகலாவையும், தினகரனையும், ஓ.பி.எஸ்-ஸையும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசைன்மென்ட் கொடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்தது.

‘பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியே போனதற்கு நீங்கள்தான் காரணம். ஆனாலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தது. அதில் உங்களுக்குப் பங்கு இருக்கிறது.

அதுபோல, இந்த முறை தினகரனையும், சசிகலாவையும், ஓ.பி.எஸ்ஸையும் எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடுங்கள்’ என்று அண்ணாமலைக்கு அமித் ஷா அசைன்மென்ட் கொடுத்தார் என்று பேச்சு இருந்தது.

அண்ணாமலையும் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவைச் சந்தித்ததால், அந்த தகவல் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால், உண்மையில் விஷயம் வேறாக இருந்தது. டோஸ் விடுவதற்காகத்தான் அண்ணாமலையை டெல்லிக்கு வருமாறு அமித் ஷா அழைத்தாராம்.

சமீபத்தில் இரண்டு தடவை அமித் ஷாவை அண்ணாமலை சந்தித்தார் என்று ஒரு தகவல் உலாவியது. ஆனால், சமீபத்தில் ஒரு தடவை அமித் ஷாவையும், இன்னொரு தடவை நட்டாவையும் அவர் சந்தித்தாராம்.

ஆனால், டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்கிறார் என்பது போலச் சிலர் ஊடகங்களுக்கு பொய்ச்செய்தியைப் பரப்புகிறார்கள்.

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையைத் தூக்குவதற்குக் காரணமே எடப்பாடி பழனிசாமிதான். அதனால், எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலைக்கு இன்னமும் கோபம் இருக்கிறது.

அப்படியிருக்கும்போது, எப்படி அவரிடம் அமித் ஷா அசைன்மென்ட் கொடுப்பார் என்று பா.ஜ.க நிர்வாகிகளே கேட்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, நாம் அவருக்குப் பிரசாரம் செய்ய வேண்டுமா என்று அண்ணாமலை நினைக்கிறார்.

ஆகவே, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே இருக்கிறார்.

இந்த நிலையில்தான், அண்ணாமலை டெல்லிக்குச் சென்றபோது, ‘உங்களைப் பற்றி சில தகவல்கள் வருகின்றன. ஒழுங்காக நீங்கள் என்.டி.ஏ-வுக்கு வேலை செய்யுங்கள். இல்லையென்றால், நடப்பது வேறாக இருக்கும்’ என்று அண்ணாமலையிடம் அமித் ஷா கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார்.

தினகரன் மிகவும் தெளிவாக இருக்கிறாராம். ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்னிறுத்திக்கொள்ளுங்கள். என்னைத் தனியாக விட்டுவிடுங்கள்’ என்று அவர் சொல்கிறாராம்.

தினகரனைப் பொறுத்தளவில், அவர் பா.ஜ.க-வை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து எந்த சிக்கலும் இல்லாமல் வெளியேற வேண்டும் என்று அவர் நினைக்கிறாராம்.

தினகரனையும், சசிகலாவையும், ஓ.பி.எஸ்ஸையும் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதால், பா.ஜ.க தலைவர்கள் வருத்தமாக இருக்கிறார்கள்.

‘எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டை இப்போதைக்கு நாங்கள் சீரியஸாகப் பார்க்கவில்லை.

2029-ம், 2031-ம்தான் எங்களுக்கு முக்கியம். ஆனால், இந்தத் தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான தேர்தல். சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய மூவரையும் சேர்த்துக்கொண்டால், எளிதாக வெற்றிபெற்றுவிடலாம்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார்’ என்று வருத்தப்படுகிறார்கள் பா.ஜ.க தலைவர்கள்.

 

Share.
Leave A Reply