சூதாட்டத்தில் தோல்வியடைந்த பின்னர், வெற்றியாளருக்கு பணம் செலுத்துவதற்காக தனது காதலியின் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய இளைஞனையும், அந்த நகைகளை வாங்கிய தங்க வியாபாரியையும் ஹொரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொடகவெல பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரும், 63 வயதுடைய தங்க வியாபாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சூதாட்டத்தில் தோல்வி

ஆரம்ப விசாரணைகளில், சந்தேக நபர் ஹொரணை – கனன்விலவைப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த வீட்டிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போனதாக இளம் பெண்ணின் தந்தை ஹொரணைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணையில் வெளிவந்த உண்மை

வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் குறித்து முறைப்பாட்டாளரிடம் விசாரித்த போது, அவரது மகளின் காதலன் தொடர்பான தகவல்கள் தெரியவந்தன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல் போன தங்க நகைகளை அந்த காதலனே திருடியிருப்பது உறுதியாகியுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், திருடப்பட்ட தங்க நகைகள் கொடகவெல மற்றும் ஹொரணைப் பகுதிகளில் உள்ள பல அடகுக் கடைகளில் அடகு வைக்கப்பட்டு, அதன்மூலம் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட நகைகள்

திருடப்பட்ட நகைகளில்,

  • ஒரு தங்க சங்கிலி

  • காதணிகள்

  • ஒரு வளையல்

  • மோதிரங்கள்

  • ஒரு பென்டன்

ஆகியவை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹொரணைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply