பகிடிவதை (Ragging) குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த 19 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பகிடிவதை சம்பவம்
பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள ஒரு வீட்டிற்கு கனிஷ்ட (Junior) மாணவர்களை அழைத்துச் சென்று, அவர்களை தாக்கியதுடன் பகிடிவதையில் ஈடுபட்டதாகக் கூறி, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 19 சிரேஷ்ட (Senior) மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
விளக்கமறியல் காலம் முடிவடைந்ததையடுத்து, சந்தேக நபர்கள் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன், 19 சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
வழக்கு ஒத்திவைப்பு
மேலும், இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு தவணையிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

