ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான அரபு நாடுகளை ஆட்சி செய்த துருக்கியின் ஒட்டோமான் பேரரசு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வீழ்ச்சியடையத் தொடங்கிய நாட்களில், குழப்பத்தில் மூழ்கி இருந்தது. அன்றைய நாட்களில் வறுமையும் அறியாமையும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள மக்கள் மீது அதன் சொந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பேரரசுகளை உருவாக்கி அறிவுசார் மறுமலர்ச்சிக்கு பங்களித்த இஸ்லாம், மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தது.
இந்த இருண்ட சூழலில் தான் எகிப்திய இஸ்லாமிய அறிஞரும், இமாம் மற்றும் பள்ளி ஆசிரியருமான ஹசன் அல்-பன்னா 1928 இல் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை நிறுவினார்.
இது பின்னர் பாடசாலைகள், மசூதிகள் என்பனவற்றில் சேவைகளை வழங்குவதற்கும் மேற்கத்திய செல்வாக்கை எதிர்ப்பதற்கும் ஒரு சமூக மற்றும் சமய அமைப்பாகவும் அதன் தொடராக ஒரு செல்வாக்குமிக்க இஸ்லாமிய இயக்கமாகவும் மாறியது.
இந்த இயக்கத்தின் நோக்கம் ஒரு கலீபாவின் (தலைமைத்துவத்தின்) கீழ் ஷரியா சட்டத்தால் (இஸ்லாமிய மார்க்க சட்ட விதிகள்) ஆளப்படும் ஓர் அரசை நிறுவுவதாகும்.
அதன் மிகவும் பிரபலமான முழக்கம் “இஸ்லாம் தான் ஒரே தீர்வு” என்பதாகும். எகிப்து உட்பட பல நாடுகளில் தடைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருந்தாலும், அப்போதிருந்து முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் ஒரு முக்கிய சக்தியாக இள்றும் இருந்து வருகின்றது.
அரபு உலகின் துயரமான நிலையை விவரிக்கும் போது மோஷே மெனுஹின் என்ற வரலாற்றியலாளர் இதை தனது “நமது காலத்தில் யூத மதத்தின் சீரழிவு” என்ற புத்தகத்தில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
1948 மே 15 அன்று அரபு உலகிற்கும் அமெரிக்க தலைமையிலான ஐரோப்பிய மேற்கின் ஆதரவுடன் சியோனிஸ்டுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் தொடங்கியது.
அண்டை அரபு நாடுகளான-எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் மற்றும் ஜோர்டான் என்பன ஐக்கிய நாடுகள் சபையில் பிரிவினைத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இயற்கையாகவே கோபம் அடைந்திருந்தன.
மேலும் அவர்கள் பலஸ்தீனின் தங்கள் சகோதரர்களைப் பாதுகாப்போம் என்று உலகிற்கு அறிவித்தனர்.
மேலும் டெய்ர் யாசின், ஜாஃபா, ஹைஃபா, ஏக்கர் மற்றும் பிற இடங்களில் பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் அவர்கள் கண்டனர்.
ஆங்கிலேய இராணுவ தளபதி குளுப் பாஷாஸின் கீழ் சிறிய ஆனால், நன்கு பயிற்சி பெற்ற ஜோர்டானிய இராணுவத்தைத் தவிர அரபு படைகள் மிகவும் மோசமான சண்டையை எதிர்கொண்டன.
திறமையான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இரக்கமற்ற மற்றும் வெற்றிக்காக போராடுவதில் உறுதியாக இருந்த ஒரு எதிரி மீது ஒழுங்கற்ற, பிளவுபட்ட, பலவீனமான தாக்குதலுடன் போராடியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மிக்க இராணுவம் தன்னால் முடிந்த வரை ஈடுகொடுத்தது.
இதனிடையே பொறுப்பற்ற, முட்டாள்தனமான மற்றும் ஆரவாரமான பேச்சுவார்த்தைகள் என நிறைய விடயங்கள் அப்போது நடந்தன.
பெரும்பாலான அரபு ஆட்சியாளர்கள் இன்று உள்ளதைப் போலவே, ஊழல் நிறைந்தவர்களாகவும், முற்றிலும் காலாவதியான கொடுங்கோலர்களாகவும் இருந்தனர்.
அவர்களின் ஆயுதப் படைகள் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வழி நடத்தப்பட்டன.
அவர்களின் விசுவாசம் பிரிட்டனுக்கு உரியதாக இருந்தது. மாறாக, பிரிட்டனோ சியோனிஸ்டுகளுக்கு இஸ்ரேல் அரசை அமைக்க பலஸ்தீர்களை அவர்களது நிலங்களிலிருந்து எந்த விலைகொடுத்தேனும் வெளியேற்ற சதித்திட்டம் தீட்டியது மட்டும் அன்றி இஸ்ரேலுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கியது.
மத்திய கிழக்கு முழுவதும் வறுமையால் பாதிக்கப்பட்ட கல்வியறிவற்ற மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆட்சியாளர்கள் அவர்களது சொந்த இருப்புக்காக பிரிட்டிஷ் எஜமானர்களை நம்பியிருந்த துரோகத்தை அறிந்திருக்கவில்லை.
காலப்போக்கில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் படைகள், ஆங்கிலேயர்கள் அறிவுறுத்திய ஆயுதம் இல்லாத அரபு படைகளைப் போலல்லாமல், சியோனிஸ்டுகளையும் ஆங்கிலேயர்களையும் அச்சுறுத்தும் வகையில் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டன.
சியோனிஸ்டுகளும் அவர்களின் அமெரிக்காவும் தான் இதற்கு மூலக் காரணம்.
இதன் விளைவாக பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஆதரவாளர்கள் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எந்த வகையிலேனும் நசுக்கப்படுவதை உறுதி செய்ய விரும்பினர்.
பலஸ்தீனை விடுவிக்க போராடி பின்னர் களைத்துப் போய் வீடு திரும்பிய பிரிட்டனின் அடிமைகளான அரபு கொடுங்கோலர்கள் அவசர அவசரமாக இஸ்லாமிய சகோதரத்துவ இயக்க உறுப்பினர்களை சிறையில் அடைக்க இதுவே காரணமாக இருந்திருக்கலாம்.
இதன் தொடராக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் தூக்கிலிடப்பட்டார்.
இந்த சியோனிச முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் இன்றும் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்திய மற்றும் பிற அடிமைகளால் உயிரோட்டமான கீழ்ப்படிதலுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மறுபுறம் இஸ்லாமிய சகோதரத்துவ குழு அரசியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக மாறியது.
குறிப்பாக 1932 இல் அதன் தலைமையகத்தை அது கெய்ரோவுக்கு மாற்றியது. பின்னர் பலஸ்தீன கிளர்ச்சி போன்ற இஸ்லாமிய காரணங்களை ஆதரிப்பதன் மூலம் இது பிரபலமடைந்தது.
சகோதரத்துவ இயக்கம் துணை இராணுவ இளைஞர் அமைப்புகளையும், போர்க்குணமிக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓர் இரகசிய சமூகத்தையும் உருவாக்கியது.
இது எகிப்திய அரசாங்கத்துடனான உறவுகளில் முறிவுக்கு வழிவகுத்தது. அதன் விளைவு இந்த அமைப்பு 1948 இல் தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு அல்-பன்னா படுகொலை செய்யப்பட்டார்.
பின்பு இந்த குழு 1950 ஆம் ஆண்டில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது மற்றும் 1952 ஆம் ஆண்டு சுதந்திர அதிகாரிகள் என்ற இராணுவ அமைப்பின் நாட்டை கையகப்படுத்தும் செயற்பாட்டையும் அது ஆதரித்தது.
இருப்பினும், 1954 இல் ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மீதான தோல்வியுற்ற படுகொலை முயற்சிக்குப் பிறகு, சகோதரத்துவ இயக்கம் மீண்டும் தடைசெய்யப்பட்டு அதன் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், இந்த இயக்கம் தொடர்ந்து இரகசியமாக செயல்பட்டு வந்தது. பலஸ்தீனில் ஹமாஸ் மற்றும் அல்-காமா அல்-இஸ்லாமியா போன்ற பல்வேறு பிளவுபட்ட குழுக்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது அல்லது அந்த குழுக்களை உருவாக்கியுள்ளது.

ஹோஸ்னி முபாரக்
மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் அடி பணிந்து சேவை செய்து வந்த கொடுங்கோலரான ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து வெளியேற்றிய 2011 எகிப்திய புரட்சியில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருந்தது.

முஹம்மது முர்சி
புரட்சிக்குப் பிறகு, சகோதரத்துவ இயக்கம் சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சியை உருவாக்கியது. அது ஜனாதிபதி தேர்தலில் வெற்றியும் பெற்றது. அதன் வேட்பாளர் முஹம்மத் முர்சி 2012 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எகிப்தில் மேற்கத்திய நாடுகளுக்கு விரோதமான ஒரு இஸ்லாமிய அரசாங்கம் பற்றிய இந்த சிந்தனை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் அரபு ஒத்துழைப்பாளர்களிடையே எச்சரிக்கை மணிகளை அனுப்பியது.
அரபு ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் உயிர்வாழ்வுக்காக மேற்கையே அன்றும் இன்றும் நம்பியுள்ளனர்.
இந்த வெற்றிக்கு எதிராக சதிகார கும்பல்கள் யாவும் ஒன்றிணைந்து நீண்ட காலத்துக்குப் பின் எகிப்தில் மக்கள் விருப்பின் படி ஜனநாயக அடிப்டையில் தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் முர்சிக்கு எதிராக சதி செய்தன.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் தமது சதித்திட்டத்தின் பங்காளிகளாக இஸ்ரேல், சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுளையும் இணைத்து கொண்டன.
எகிப்தில் செயற்கையான உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க சுமார் பதினொரு பில்லியன் டொலர்களை தமது சகாக்கள் மூலம் செலவிடச் செய்து மக்கள் எழுச்சிக்கு மேற்குலகம் வழிவகுத்தது.

Abdel Fattah el-Sisi
முர்சியின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நசுக்குவதற்கும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்வதற்காகவும் அப்தெல் ஃபத்தா அல் சிசி தலைமையில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை எகிப்தில் நிறுவுவதற்கு இது உதவியது.
இந்த மொத்த செயல்பாடுகளின் போதும் நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் அப்பாவி எகிப்திய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் மசூதிகளுக்குள்ளும் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள பல எதோச்சதிகார அரசாங்கங்களால் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஒரு பெரிய அச்சுறுத்தலான இயக்கமாகவே கருதப்பட்டது.
இந்த அமைப்பு ஒரு பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டு எகிப்தும், சவூதி அரேபியாவும் அதை தடை செய்தன. பின்னர் ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும் இந்த வரிசையில் இணைந்து கொண்டன.
இஸ்ரேலுடனான சவூதி அரேபியாவின் உறவுகள் (ஏனைய விவகாரங்களுடன் சேர்த்து) ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத்துக்கு எதிரான இஸ்ரேலின் போராட்டத்திற்கு அதன் முழுமையான ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரு பிரிவுகளும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் செல்வாக்கால் உருவாக்கப்பட்டவை.
2014இல் தங்கள் மீது சவூதி அரேபியா விதித்த தடை சகோதரத்துவ இயக்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஜனாதிபதி கமால் அப்துல் நாசரின் ஆட்சியின் போது எகிப்தின் மீதான தடைகளை எதிர்கொள்ள 1960 களில் இருந்து சவூதி இராச்சியத்தின் ஆதரவைப்பெற்று வந்ததே இந்த அதிர்ச்சிக்கு பிரதான காரணம்.
2025 நவம்பர் 24 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்து,லெபனான் மற்றும் ஜோர்டானில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கிளைகளை பலஸ்தீன குழுவான ஹமாஸுக்கு அவர்கள் ஆதரவளிப்பதாகக் கூறி “பயங்கரவாத” அமைப்புகள் என்று முத்திரை குத்த உத்தரவிட்டார்.
அரபு சர்வாதிகார ஆட்சிகள் பல ஆண்டுகளாக வொஷிங்டனை சகோதரத்துவ இயக்கத்தை குற்றவாளியாக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளன.
காரணம் இந்த இயக்கமானது அரபு ஆட்சியாளர்களின் மிகவும் வலிமையான சமூக மற்றும் அரசியல் போட்டியாளராக காணப்பட்டது.
எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன அரபு வசந்தத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சியின் சிற்பிகள் என்று இங்கு குறிப்பிடலாம்.
இதன் காரணமாக அவை பிராந்தியத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பில் எஞ்சியிருக்கும் சக்திகளை நசுக்குவதற்கான ஒரு வாய்ப்பாக ட்ரம்ப்பின் முடிவை வரவேற்றன.
சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் வெள்ளை மாளிகை விஜயத்துக்கு சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது. எனவே இதை அமெரிக்கா மேற்கொண்ட தற்செயலான முடிவாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் 27 நவம்பர் 2025 புதன்கிழமை அன்று, இந்த நிர்வாக உத்தரவை நிராகரித்துள்ளது. அது மட்டுமன்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் என்பன இந்த நடவடிக்கையை எடுக்க அமெரிக்க நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
” வெளிப்புற அழுத்தத்தின் அளவு மட்டுமே குறிப்பாக மாறியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் என்பன அமெரிக்க மக்களின் நலன்களுக்கு அல்லாமல் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்யும் கொள்கைகளை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன” என்று இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
லத்தீப் பாரூக் Virakesari

