சர்வதேச அரசியல் முறையானது ஐரோப்பிய மரபை மையப்படுத்தியதாகக் காணப்படுகிறது.

அதன் கோட்பாடுகளும் நடைமுறைகளும் மேற்கு ஐரோப்பிய மரபிலிருந்து புரிந்து கொள்ளப்படுகின்றன.

தற்போது கண்டங்களும் பிராந்தியங்களும் புதிய மாதிரிகளை முதன்மைப்படுத்தினாலும், ஐரோப்பா அதிலும் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவின் தாக்கம் செறிவாக காணப்படுகிறது.

ஆனால் மேற்கு ஐரோப்பிய மரபு என்பது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்க ஐரோப்பிய மரபாகவே அதிகம் உணரப்பட்டது.

அத்தகைய அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உறவில், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிற்பாடு அதிக முரண்பாடுகள் மேலோங்கி உள்ளன.

அவ்வகை முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகளாகவே கடந்த காலம் முழுவதும் நிலவின. அது ஒரு பகை முரண்பாட்டுக்குரிய

11.12.2025அன்று அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகிற போது, ‘பலவீனமான தலைவர்களால் ஐரோப்பா வழிநடத்தப்படுவதாகவும்,

அவர்களது நடவடிக்கைகள் ஐரோப்பிய மக்களை அழிவுக்கு உள்ளாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டியதோடு, உக்ரைன் ரஷ்யா உடனான போரில் அழிந்து கொண்டிருப்பதாலும், ரஷ்யா உக்ரைன் உடனான போரில் வெற்றி பெற்று வருவதாகவும்’ தெரிவித்துள்ளார்.

‘மேற்கு ஐரோப்பிய தலைவர்களின் பலவீனமான முடிவுகளும் தீர்மானங்களும் உலகத்துக்கு அபாயமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இத்தகைய குற்றச்சாட்டுக்கு பின்னால் இருக்கும் அரசியல் ஆழமானது.

முதலாவது, அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவை பதவி ஏற்ற போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக பிரசார மேடைகளில் அவர் கருத்து முன்வைத்திருந்தார்.

ஆனால் நடைமுறையில் அத்தகைய விடயத்தை அவரால் மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது. மேற்கு ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் போரை மேற்கு ஐரோப்பிய போராக வடிவமைத்திருப்பதே அதற்கான காரணமாகும்.

அமெரிக்கா உக்ரைனை கைவிட்ட பின்னரும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனின் இராணுவ – பொருளாதார – அரசியல் விடயங்களில் அதீதமான ஈடுபாட்டை ஏற்படுத்தி வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளே தற்போது உக்ரைன் போரை நிகழ்த்துவதாக மதிப்பிடப்படுகிறது. சமாதானம் என்பது அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடுவது போல் சாத்தியமற்றதொன்றாக நிலவுகிறது. உலக வல்லரசான அமெரிக்காவினால் ரஷ்ய_- உக்ரைன் போரை நிறுத்த முடியவில்லை என்பதே அவரது அதிருப்தியாகும்.

இரண்டாவது, அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் உள்ள உறவு பெரிய அளவில் விரிசல் அடையத் தொடங்கியுள்ளது.

காரணம் நேட்டோ உக்ரைன் போரை நிகழ்த்துவதாகும். நேட்டோவில் உக்ரைன் இணைய முயர்ந்திருப்பது போருக்கு முக்கிய காரணம் என்று அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

அதனால் ஐரோப்பியர்களின் பிரச்சினை அமெரிக்கா கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஐரோப்பியர்களுக்காக பாரியளவு நிதியை அமெரிக்கா வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ட்ரம்ப் விவாதித்து வருகிறார்.

நேட்டோ காலாவதியாகி விட்டது என்றும், நேட்டோ கலைக்கப்பட வேண்டும் என்று ஊடகங்கள் மத்தியில் உரையாடுகின்ற எண்ணத்தை டொனால்ட் ட்ரம்ப் கொண்டிருக்கின்றார்.

அழிவுகளுக்கும் மக்கள் கொல்லப்படுவதற்கும் அடிப்படையில் நேட்டோ காரணம் என குறிப்பிடுகின்றார்.

எனவேதான் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாதுள்ளது என்ற எண்ணத்தை தனது அதிர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது நேட்டோவின் தலைமைத்துவம் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பாவை போருக்கு தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது மேற்கத்தேய ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் காணப்படும் நட்பு முரண்பாட்டின் எல்லையாக கொள்ளப்படுகிறது.

அதாவது நட்பு முரண்பாடு முடிவுக்கு வந்து, பகை முரண்பாட்டின் தொடக்கத்தை மேற்கு ஐரோப்பியா நோக்கி அமெரிக்க நாடுகள் அடைந்திருக்கின்றன. அல்லது அதற்கான ஆரம்பத்தினை கொண்டிருக்கின்றன.

மூன்றாவது, ரஷ்ய – அமெரிக்கா உறவானது மிக வலுவானது என்பதை அல்லது புட்டினுக்கும் டொனால்ட் ட்ரம்புக்குமான நட்புறவு பலமானது என்பதை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்த முயலுகின்றார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த உடன்பாடு போன்று 22 அம்சங்களை முன்வைத்து ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் முயற்சி எடுத்துள்ளார்.

அவ்வுடன்படிக்கை முழுமையாக ரஷ்யாவுக்கு சார்பானது என மேற்கு நாடுகள் கருதுகின்றன.

அதனால் உக்ரைனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாதையில் ரஷ்யாவுக்கு விரோதமானது என்ற எண்ணத்தோடு செயல்பட முயலுகின்றது.

ஜெலன்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தேர்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது காலப்பகுதி முடிந்த நிலையில் புதியதொரு ஜனாதிபதியோடு உரையாடுவது என்ற எண்ணத்தை புட்டின் அதிகம் வெளிப்படுத்தியிருந்தார்.

அதனால் உக்ரைன் உடனான உரையாடலை தேர்தலுக்குப் பின்னர் மேற்கொள்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி திட்டமிடுவதை காண முடிகின்றது.

அதேவேளை மேற்கு ஐரோப்பிய நலன்களுக்கு தலைசாய்க்கக்கூடிய இன்னுமோர் ஜனாதிபதியை உக்ரைனில் கண்டெடுப்பது மேற்கு ஐரோப்பியர்களுக்கு கடினமானது.

இதனால் ஜெலன்ஸ்கியை தொடர்ந்து ஆட்சியில் வைத்துக்கொள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. இதுவே அமெரிக்க,- மேற்கு ஐரோப்பிய நாட்டு தலைவர்களுக்கு இடையில் எழுந்துள்ள விரிசலாகும்.

நான்காவது, ரஷ்யாவின் அமைவிடமும் அதன் இராணுவ பலமும் உலக வரலாற்றில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தின என்ற அடிப்படையில் அமெரிக்க_- ரஷ்ய நட்புறவு வலுவானதாக பேணப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் கருதுகின்றார்.

அத்தகைய நட்புறவை பலவீனப்படுத்தவோ அல்லது கைவிடவோ டொனால்ட் ட்ரம்ப் தயாராக இல்லை.

எனவே மேற்கு ஐரோப்பிய_- அமெரிக்க முரண்பாடு என்பது நட்பு ரீதியானது. ஆனால் அது அதன் எல்லைக்குள் இல்லாத நிலையை தற்போது அடைந்துள்ளது.

ஆனாலும் இரண்டு தேசங்களும் பரஸ்பரம் நட்புறவை இழக்குமாயின், வலுவான ஐரோப்பிய இருப்பை பலவீனப்படுத்தும். உலகத்துக்கே தலைமை தாங்குகின்ற திறனை ஐரோப்பாவோ அல்லது அமெரிக்காவும் இழக்கின்ற நிலை ஏற்படும்.

அமெரிக்க_- ஐரோப்பிய கூட்டு உலக ஆதிக்கத்திற்கான வலுவான அடிப்படையாகும். அவ்வடிப்படை தகர்ந்து போவதற்கு ஒரு போதும் இரு தேசங்களில் தலைமைகள் அனுமதிப்பதில்லை.

தற்போதைய நட்பு முரண்பாடும் பகை முரண்பாடாக மாறுவதற்கு முன்னர் அமெரிக்க ஆட்சியில் மாற்றம் நிகழும். அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்.

தலைமைத்துவங்களின் புதிய வடிவங்கள், அதன் மூலம் தமக்குள்ளே சமரசம் செய்து கொண்டு, உலகத்தை ஆளுகைக்கு உட்படுத்த முனையும். ஆனால் 21ஆம் நூற்றாண்டு அவ்வகையான உத்திகள் பலவீனமாக இருக்கின்ற சூழலையே படம்பிடித்து காட்டுகிறது.

மேற்கு ஐரோப்பா – அமெரிக்க பகைமை என்பது கீழைத் தேசங்களின் எழுச்சிக்கு வாய்ப்பான காலப்பகுதியாக சர்வதேச அரசியல் பொறிமுறைகள் இனங்காண வைக்கின்றன.

எனவே இது ஒரு நிரந்தரமான பகை முரண்பாட்டுக்குரிய வடிவத்தை எடுக்குமாயின் மேற்குல ஏகாதிபத்தியத்தின் சரிவு தவிர்க்க முடியாததாக மாற்றம் வரும்.

-ரீ. கணேசலிங்கம்-

Share.
Leave A Reply