யாழ்ப்பாணம் கோண்டாவில், கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் உணவு, கோழி இறைச்சி கழிவுகளால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் நகருக்கு குடிநீர் வழங்கும் கிணறுகள் அமைந்துள்ள நிலையில், கழிவுகளை நாய்கள் இழுத்து விடுவதாலும், காகங்கள் எடுத்துச் செல்வதாலும் வீதியில் பயணிப்போரும், மயானத்திற்கு வருவோரும் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்தப் பிரச்சனை தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அசண்டையீனமாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களைப் பொருத்தி, கழிவுகளை வீசிச் செல்வோரை இனம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

