திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறை, நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 7.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த பிரதேச சபைத்தலைவர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இன்று புதன்கிழமை (17) குச்சவெளி பிரதேச சபையின் இவ்வாண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தை முன்வைக்க சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த வழக்கு விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், பிரதேச சபைத்தலைவர் தமது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் நுழைவதை தற்காலிகமாகத் தடுக்கும் நோக்கில் இந்த முத்திரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படாத வகையில், பிரதேச சபைத்தலைவர் தமது கடமைகளை தொடர்ந்து ஆற்றுவதற்காக தற்காலிகமாக வேறு ஒரு அலுவலக அறையை வழங்குமாறு சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், குச்சவெளி பிரதேச சபை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

