இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கையை பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (19) கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில், இலங்கைக்கு அவசர நிதி வசதி வழங்குவது தொடர்பாக இறுதி இணக்கப்பாட்டை எட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட கடுமையான சேதங்கள் மற்றும் அதன் பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்காக, 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி வசதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் IMF-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த அவசர நிதி வசதி, தற்போது இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility – EFF) திட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், IMF வழங்கி வரும் EFF திட்டத்தின் 5வது மீளாய்வு நிறைவடைந்துள்ளதுடன், அதற்கான அங்கீகாரம் வழங்குவதற்காக நிறைவேற்று சபை கடந்த டிசம்பர் 15ஆம் திகதி கூடவிருந்தது. ஆனால், புதிய அவசர நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் காரணமாக அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள IMF நிறைவேற்று சபை கூட்டத்தில், அவசர நிதி வசதி கோரிக்கையுடன் இணைத்து, EFF திட்டத்தின் 5வது மீளாய்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

