பொதுவாக ஒரு வீட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நூற்றாண்டுகளாக நகை, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கு தங்கம் நம்பகமான சொத்தாக கருதப்படுகிறது. ஆனால், விலையின் அடிப்படையில் தங்கமே உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் என்று நினைப்பது தவறு.
உலகில் தங்கத்தை விட பல மடங்கு அதிக மதிப்புடைய ஒரு உலோகம் உள்ளது. அதுதான் கலிஃபோர்னியம் (Californium). இந்த அரிதான கதிரியக்க உலோகத்தின் வெறும் ஒரு கிராம் விலை சுமார் 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.239 கோடி. இதன் மதிப்பு சுமார் 200 கிலோகிராம் தங்கத்தின் விலைக்கு சமம் என்பதால் இதன் விலை உலகின் உச்சத்தில் உள்ளது.
கலிஃபோர்னியம் என்றால் என்ன?
கலிஃபோர்னியம் (Cf) என்பது ஒரு செயற்கை கதிரியக்க வேதியியல் தனிமம். இது 1950ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைப் போல பூமியில் இருந்து சுரங்கம் எடுத்து பெற முடியாத இந்த உலோகம், அணு உலைகளில் மிகக் கடினமான மற்றும் நீண்டகால அணுக்கரு செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படுகிறது.
ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது?
கலிஃபோர்னியத்தின் அரிதான தன்மை, உற்பத்தி சிக்கல் மற்றும் மிகக் குறைந்த அளவிலான தயாரிப்பு ஆகியவையே இதன் அதிக விலைக்கு காரணம். இதை உருவாக்க நியூட்ரான்கள் மூலம் மற்ற தனிமங்களை தாக்கும் சிக்கலான அணுக்கரு செயல்முறைகள் தேவைப்படுகின்றன. இதனால் உற்பத்தி மெதுவாகவும் செலவுயர்ந்ததாகவும் உள்ளது.
எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
கலிஃபோர்னியம் முக்கியமாக:
-
அணுசக்தி ஆராய்ச்சியில் சக்திவாய்ந்த நியூட்ரான் மூலமாக
-
மருத்துவத் துறையில், குறிப்பாக Californium-252 பயன்படுத்தப்படும் சிறப்பு புற்றுநோய் சிகிச்சையில்
-
தொழில்துறை சோதனைகள், விண்வெளி ஆய்வு, மற்றும் தேசிய பாதுகாப்பு துறைகளில் மறைக்கப்பட்ட அணுசக்தி பொருட்களை கண்டறிய
பயன்படுத்தப்படுகிறது.
இதனால் தான் தங்கம், பிளாட்டினம், வைரம் போன்றவை அனைத்தையும் விட, கலிஃபோர்னியம் உலகின் மிக விலையுயர்ந்த உலோகமாக கருதப்படுகிறது.

