1987ஆம் ஆண்டு இலங்கை இரா­ணுவம் ‘ஒப்­ப­ரேசன் லிப­ரேசன்’ நட­வ­டிக்­கையின் மூலம், வட­ம­ராட்­சியைக் கைப்­பற்­றிய சில நாட்­களில், இந்­தியா ஓர் அதி­ரடி நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது.

1987 ஜூன் 4ஆம் திகதி ‘ஒப்­ப­ரேசன் பூமாலை’ என்ற பெயரில் யாழ்ப்­பா­ணத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு, உதவிப் பொருட்­களை வான்­வ­ழி­யாக வீசு­கின்ற நட­வ­டிக்­கையே அது.

அன்று மாலை 3 மணிக்கு புது­டெல்­லியில் இருந்த இலங்கைத் தூதுவர் பேனாட் குண­தி­லக, சவுத் புளொக்கில் இருந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு அழைக்­கப்­பட்டார்.

அப்­போ­தைய இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் நட்வர் சிங், இன்னும் ஒரு மணி­நே­ரத்தில் யாழ்ப்­பா­ணத்தில் இந்­திய விமா­னப்­படை விமா­னங்கள் உதவிப் பொதி­களை வீச­வுள்ள தக­வலை பேனாட் குண­தி­ல­க­விடம், பகிர்ந்து கொண்டார்.

இந்தப் பணியை முடிக்க இலங்கை விமா­னப்­படை தடை­யாக இருந்தால், மிராஜ் விமா­னங்கள் தமது பலத்­தினால் அதனை முறி­ய­டிக்கும் என்ற தக­வலும் அப்­போது, பேனாட் குண­தி­ல­க­வுக்கு சொல்­லப்­பட்­டது.

அதை­ய­டுத்து, பிற்­பகல் 3.55 மணி­ய­ளவில் பெங்­க­ளூ­ருவில் இருந்து இரண்டு அன்­டடோவ் -32 விமா­னங்­களும், தாம்­ப­ரத்தில் இருந்து இரண்டு அன்­டடோவ் -32 விமா­னங்­களும்- அரிசி, பால்மா, மரக்­க­றிகள் மற்றும் எண்ணெய் போன்ற தலா 25 தொன் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுடன் புறப்­பட்­டன.

அவற்­றுக்குப் பாது­காப்­பாக, அப்­போது இந்­தி­யா­விடம் இருந்த அதி­ந­வீன போர் விமா­னங்­க­ளான, ஐந்து மிராஜ்-2000 விமா­னங்கள் புறப்­பட்­டன.

மாலை 5 மணிக்கு யாழ். நக­ரத்­திற்கு மேலாக பறந்த இந்­திய விமா­னங்கள், 1500 அடி உய­ரத்­திற்கு தாழப் பறந்து, உதவிப் பொதி­களை வீசின.

அவை யாழ். நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீற்றர் சுற்­ற­ள­வுள்ள பகு­திக்குள் விழுந்­தன.

அந்த விமா­னங்கள் அனைத்தும் பாது­காப்­பாக மாலை 6.18 மணிக்கு பெங்­க­ளூ­ருவில் தரை­யி­றங்­கின.

இலங்­கையில் இந்­தி­யாவின் தலை­யீட்­டுக்­கான ஒரு முன்­னோடி நட­வ­டிக்கை தான் அது.

உண்­மையில் இந்­தியா உதவிப் பொருட்­களை வட­ம­ராட்­சியின் மீது தான் வீசி­யி­ருக்க வேண்டும். அதுவே அப்­போ­தைய போர் நட­வ­டிக்­கை­யினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தப் பகுதி இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் இருந்­தது.

அதற்குப் பதி­லாக, விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த யாழ்ப்­பா­ணத்தின் மீதே இந்­தியா உதவிப் பொதி­களை போட்­டது. இந்த உத­விப்­பொ­திகள் போடப்­பட்ட போது இலங்கை இரா­ணு­வமும் விமா­னப்­ப­டையும் செய்­வ­த­றி­யாமல் திகைத்துப் போயி­ருந்­தன.

யாழ்ப்­பா­ணத்தைக் கைப்­பற்றும் நட­வ­டிக்­கையை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு அழுத்தம் கொடுக்கும் நட­வ­டிக்­கையே அது என்­பதை அவர்கள் புரிந்து கொண்­டார்கள்.

இதற்கு தெற்கில் கடும் எதிர்ப்புக் கிளம்­பி­யது.

இலங்­கையின் இறை­மையை இந்­தியா மீறி விட்­ட­தாக குற்­றம்­சாட்­டி­னார்கள்.

இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு, ஜே.வி.பி. தனது இரண்­டா­வது ஆயுதக் கிளர்ச்­சியை தீவி­ரப்­ப­டுத்­தி­யது.

இந்­தி­யாவைக் கடு­மை­யாக எதிர்த்­தது.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக இந்­தி­யர்­க­ளுக்கு எதி­ராக இந்­திய பொருட்­க­ளுக்கு எதி­ராக -அது ஒரு பகி­ரங்கப் போரையே முன்­னெ­டுத்­தது.

ஒப்­ப­ரேசன் பூமா­லையை வைத்து ஜே.வி.பி.யும் பிற கட்­சி­களும் ஜே.ஆர். அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவும், இந்­தி­யா­வுக்கு எதி­ரா­கவும் போராட்­டங்­களை தீவி­ரப்­ப­டுத்­திய சூழலில், 1987 ஜூலை 29ஆம் திகதி இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்தி கொழும்பு வந்து இந்­திய- – இலங்கை ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்டார்.

அந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­டதும், மீண்டும் இந்­திய போர் விமா­னங்­களும், அன்­டனோவ் போக்­கு­வ­ரத்து விமா­னங்­களும் யாழ்ப்­பாணம் மற்றும் திரு­கோ­ண­ம­லையில் தரை­யி­றங்­கின.

அது இந்­தி­யாவின் ஆழ­மான திட்­டத்­து­ட­னான ஒரு தரை­யி­றக்க நட­வ­டிக்கை.

இதன்­போதும், இலங்­கையின் இறை­மையை இந்­தியா மீறி விட்­ட­தாக குற்­றம்­சாட்­டி­னார்கள்.

ஆனால். இந்­த­முறை அப்­ப­டி­யல்ல – ஜே.ஆரின் ஒப்­பு­த­லுடன் தான் இந்­தியப் படைகள் தரை­யி­றங்­கின.

அவர்கள் தனி­யா­ன­தொரு திட்­டத்­துடன் நீண்­ட­காலம் நிலை­கொள்­வ­தற்குத் தயா­ராக இருந்­தனர்.

இந்­தியப் படை­களை வெளி­யேற்ற ஜே.வி.பி. தெற்கில் ஆயுதப் போராட்­டத்தை நடத்­தி­யது.

வடக்கு, கிழக்கில் புலிகள் நேர­டி­யான இந்­தியப் படை­யி­ன­ருடன் மோதி­னார்கள்.

இன்­னொரு பக்கம், 1998இல் ஆட்­சிக்கு வந்த பிரே­ம­தா­சவும் இந்­தியப் படை­களை வெளி­யேற நெருக்­க­டிக்ளைக் கொடுத்தார்.

அதன் பின்னர் இந்­தியா வேறு வழி­யின்றி தனது படை­களை திருப்பி அழைத்துக் கொண்­டது.

2004 டிசெம்பர் 26ஆம் திகதி சுனாமி பேர­ழிவை அடுத்து இந்­தியா தனது படை­களை மீண்டும் இலங்­கைக்கு அனுப்­பி­யது.

சுனா­மியைத் தொடர்ந்து, இலங்கை சர்­வ­தேச உத­வியைக் கோரிய போது, இந்­தியா விரை­வாக பதி­ல­ளித்­தது.

பேர­ழிவு ஏற்­பட்ட சில மணி நேரங்­க­ளுக்குள் இந்­திய கடற்­படை மருத்­துவக் குழு கொழும்­புக்கு வந்­தது.

இந்­தியா மொத்தம் 14 கடற்­படை மற்றும் கட­லோர காவல்­படை கப்­பல்­க­ளையும், கிட்­டத்­தட்ட 1,000 இரா­ணு­வத்­தினர் மற்றும் பல டசின் விமா­னங்கள் மற்றும் ஹெலி­கொப்­டர்­க­ளையும் அனுப்­பி­யது.

உயிர் பிழைத்­த­வர்­களைக் கண்­டு­பி­டிப்­பது, உடல்­களை மீட்­பது, மருத்­துவ உதவி வழங்­கு­வது, உணவு மற்றும் பொருட்­களை விமா­னத்தில் வீசு­வது மற்றும் காலி, திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை போன்ற பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் நிலை­மையை மதிப்­பி­டு­வதில் இந்­தியப் படைகள் ஈடு­பட்­டன.

ஆனால், 1987இல் இந்­தி­யப்­ப­டைகள் உணவுப் பொதி­களை யாழ்ப்­பா­ணத்தில் வீசிய போது- இந்­தியப் படைகள் வடக்கு கிழக்கில் வந்­தி­றங்­கிய போது தெற்கில் எதிர்ப்புத் தெரி­வித்­த­வர்கள் யாரும், சுனா­மிக்குப் பின்னர் இந்­தியப் படைகள் வந்­தி­றங்­கி­ய­தற்கு எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை.

ஜே.வி.பி.யினர் கூட அடக்­கியே வாசித்­தனர். அப்­போது ஆட்­சியில் இருந்த சந்­தி­ரிகா அர­சாங்­கத்தில் அவர்­களும் பங்­கா­ளி­க­ளாக இருந்­தனர்.

அதன் பின்­ன­ரான கால­கட்­டத்தில் இலங்­கைக்கு முதலில் ஓடி வந்து உதவும் நாடாக இந்­தியா இருந்து வரு­கி­றது.

2020இல் கொவிட் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக, இந்­தியா வக்சின் மைத்ரி என்ற பெயரில், மனி­தா­பி­மான தடுப்­பூ­சி­களை வழங்­கி­யது.

அப்­போதும் அதனை யாரும் எதிர்க்­க­வில்லை.

கோட்­டா­பய ராஜபக் ஷவின் காலத்தில் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்ட போது, இந்­தியா உத­வி­களை அள்ளி வழங்­கி­யது.

அதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை.

இப்­போது ‘தித்வா’ புய­லினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் உதவிப் பணி­களில் ஈடு­பட இந்­தியா ‘சாகர் பந்து’ என்ற நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கி­றது.

புயல் தாக்­கிய போது, கொழும்பு துறை­மு­கத்தில் தரிந்து நின்ற இந்­தியக் கடற்­ப­டையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமா­னந்­தாங்கிக் கப்பல் உதவிப் பொருட்­களை வழங்­கி­ய­துடன் இரண்டு ஹெலி­கொப்­டர்­க­ளையும் தேடுதல் மீட்பு, உதவிப் பணி­களில் ஈடு­ப­டுத்­தி­யது.

1987ஆம் ஆண்டு ஒப்­ப­ரேசன் பூமா­லைக்­கான திட்­டத்தை தயா­ரித்து, இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னரே விமா­னங்­களை பெங்­க­ளூ­ரு­வுக்கும் சென்­னைக்கும் அனுப்பி வைத்த – ஆக்ரா விமா­னப்­படைத் தளம், சாகர் பந்து நட­வ­டிக்­கை­யிலும் தீவிர பங்­கெ­டுக்­கி­றது.

அங்­கி­ருந்து உதவிப் பொருட்­களை மாத்­திரம் இந்­தியா அனுப்­ப­வில்லை. உதவி மீட்­புக்­கு­ழு­வி­னரை அனுப்­பி­யது.

முழு வச­தி­க­ளையும் கொண்ட இரண்டு நட­மாடும் மருத்­து­வ­ம­னை­க­ளையும், அவற்­றுக்­கான மருத்­துவக் குழு­வி­ன­ரையும் அனுப்­பி­யது.

கடற்­படைக் கப்­பல்­க­ளிலும், உதவிப் பொருட்­களை அனுப்பி வைத்­தது.

ஒப்­ப­ரேசன் பூமா­லைக்கு முன்னர், புது­டெல்­லியில் இருந்த இந்­தியத் தூது­வரை அழைத்து தகவல் மட்டும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால், இந்­த­முறை இந்­தியப் பிர­தமர் மோடி, ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவைத் தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறி­யி­ருக்­கிறார்.

இலங்கையின் மீட்சிக்கான உதவிகளை வழங்கத் தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, நான்கு தசாப்தங்களுக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இப்போது இந்திய விமானங்கள் வருவதையோ, இந்தியப் படையினர் இங்கு மீட்பு தேடும் பணிகளில் ஈடுபடுவதையோ யாரும் எதிர்க்கவில்லை.

இறையாண்மையின் மீதான தாக்குதலாக எடுத்துக் கூறவில்லை. இது ஏன்?

அப்போது எதிர்த்த ஜே.வி.பி. இப்போது ஆட்சியில் இருக்கிறது என்பது ஒரு காரணம்.

இன்னொரு காரணம், அப்போது இந்திய விமானங்கள் வீசிய உதவிப் பொருட்கள் தமிழர்களுக்காக வீசப்பட்டவை.

ஆனால், இப்போது இந்தியாவின் உதவிகள் பெரும்பாலும், தென்பகுதியை மையப்படுத்தியவை.

அதனால், இறையாண்மை பற்றிய அச்சங்கள் அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கிறது.

 

என்.கண்ணன்

 

 

 

 

 

Share.
Leave A Reply