தகரங்கள் கழற்றியவர்களுக்கு 20 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் கூறியதாக வெளியாகிய தகவல் உண்மையல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் அந்த அறிவிப்பை நம்பி தானும் வீட்டில் இருந்த இரண்டு தகரங்களை கழற்றியதாக கூறினார். ஆனால், அதற்கான நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“நம்பி செய்தேன்… ஆனால் பணம் கிடைக்கவில்லை”
அர்ச்சுனா ராமநாதன் கூறுகையில்,
“தகரங்கள் கழற்றினால் 20 இலட்சம் ரூபா தருவதாக கூறினார்கள். அதை நம்பி நானும் இரண்டு தகடுகளை கழற்றினேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை. தகரம் மட்டுமல்ல, இப்போது உள்ளாடை வாங்குவதற்குக் கூட பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது”
என்று கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனம்
தொடர்ந்து பேசிய அவர்,
“இந்த அரசாங்கம் தமிழ், சிங்கள மக்களுக்கே வேண்டாத ஒன்றாக மாறியுள்ளது. கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலைமை அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது”
என்று அரசாங்கத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
மகாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு
மேலும்,
“நான் தமிழன், இந்து. எனினும், அஸ்கிரிய பீடத்தாலும் மகாநாயக்க தேரர்களாலும் கட்டப்பட்ட நூல்கள் என் கையில் உள்ளன. அவர்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விளக்கியுள்ளேன். இதற்கு அவர்கள், இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் என கூறினார்கள்”
என்றும் அவர் தெரிவித்தார்.
“என்னை யாரும் கொல்ல மாட்டார்கள்”
தன் உரையின் இறுதியில்,
“நான் தமிழன். எந்தவொரு சிங்களவரும் என்னை கொல்ல மாட்டார்”
என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இந்த உரை, நாடாளுமன்றத்தில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

