கோவை அடுத்த கணபதியைச் சேர்ந்த ஜீவா (25) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அவரது வீட்டின் அருகே வசித்த பெண் ஒருவர் குளிப்பதை ஜீவா வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஜீவாவை சரமாரியாக தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜீவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் காயங்களுக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் விசாரித்த போது, ஜீவா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டது என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையிலும், விபத்தே காயங்களுக்கு காரணம் என ஜீவா எழுத்து மூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2024 ஜூன் 26ஆம் திகதி, சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர், ஜீவாவின் அண்ணன் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொண்ட போது, பெண்ணின் உறவினர்கள் தாக்கியதாலேயே ஜீவா உயிரிழந்ததாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், தனது சகோதரன் பெண்ணின் உறவினர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சம்பவம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளதால், வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன் பேரில், சரவணம்பட்டி காவல்துறையினர் தற்போது வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கருதப்பட்ட இந்த மரணம், தற்போது கொலை வழக்காக மாறியுள்ளமை கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply