அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கு வடபகுதி அரசியல்வாதிகளும் ஆதரவாக பேசியுள்ளனர். ஆனால் இருநூறு வருடங்களாக பல தலைமுறைகளைத் தாண்டி ஒரே இடத்தில் வசித்து வரும் மக்களை அவ்வாறு இரவோடிரவாக மற்றுமொரு இடத்துக்கு மாற்றுவதென்பது முடியாத காரியம்.
மலையக மக்களை குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களான லயன் அறைகளிலிருந்து அப்புறப்படுத்தி வெகு தொலைவில் அல்லது தொடர்பற்ற இடங்களில் குடியமர்த்தும் திட்டங்கள் அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் அத்திட்டங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எவரும் சிந்தித்துப்பார்ப்பதில்லை.
ஒருவேளை இந்தத் திட்டங்கள் சரியான திட்டமிடலுடன் செய்யப்பட்டால் அவர்களுக்கு லயன் வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்குமே ஒழிய அவர்களின் வாழ்வாதாரம் குறித்த கேள்வி எழும்.
200 வருடங்களாக 10×12 அடி கொண்ட லயன் அறைகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்வதிலிருந்து விடுபட்டு தனிவீட்டுத் திட்டத்திற்கு மாறுவது தனிமனித கௌரவத்தை உயர்த்தும். அல்லது உயர்த்தலாம். இதை அடிப்படையாகக்கொண்டே நல்லாட்சி காலத்திலும் தனி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் தனி வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நாமே காரணம் என கூறும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அவ்வீடுகள் பாதுகாப்பான காணிகளில் அமைக்கப்பட்டனவா என்பது குறித்து தேடிப்பார்த்தார்களா அல்லது அந்த வீட்டு பயனாளிகளுக்கு காணி உரிமையைப் பெற்றுக்கொடுத்தனரா என்றால் இல்லை என்பதே பதில்.
மலையகத்தின் பல லயன் குடியிருப்புகள் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. மக்களை பாதுகாப்பான சமவெளிப் பகுதிகளுக்கோ அல்லது உறுதியான நிலப்பகுதிகளுக்கோ மாற்றுவது குறித்து நீண்ட காலமாக எவரும் சிந்திக்கவில்லை.
லயன் அறையில் வாழும்போது அவர்களுக்கு நிலவுரிமை கிடையாது. புதிய குடியிருப்புத் திட்டங்களில் அவர்களுக்குச் சொந்தமாக 7 பேர்ச் அல்லது 10 பேர்ச் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கலாம்.
ஆனால் தோட்டத் தொழிலாளி என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு ஏனைய சமூகங்களைப் போல கிராமியக் கட்டமைப்பில் வாழும் வாய்ப்பு உருவாகும் என்றால் அவர்களின் ஜீவனோபாயத்துக்கு என்ன வழி?
மலையக மக்களின் பிரதான வாழ்வாதாரம் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள். குடியிருப்புக்களை தோட்டத்திலிருந்து வெகு தொலைவில் அமைக்கும்போது அவர்கள் வேலைக்குச் செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். தினசரி போக்குவரத்துச் செலவு அவர்களின் சம்பளத்தில் பெரும் பகுதியை விழுங்கிவிடும். இதனால் அவர்கள் வேலையை இழக்க நேரிடும்.
பல நேரங்களில்இ ஒதுக்குப்புறமான காணிகளிலேயே வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. அங்கே குடிநீர், மின்சாரம், முறையான பாதைகள் இருப்பதில்லை. லயன் அறைகள் மோசமாக இருந்தாலும் அவை வேலைத்தளத்திற்கு அருகிலேயே உள்ளன.
தோட்டப் பாடசாலையும், டிஸ்பென்சரியும் தோட்டத்திற்குள்ளேயே இருக்கும்.
மக்களைத் தூரத்து இடங்களில் குடியமர்த்தும்போது, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வது கடினமாகும்.
இதனால் இடைவிலகல் அதிகரிக்கும். அவசர மருத்துவ தேவைகளுக்குப் போதிய போக்குவரத்து வசதிகள் புதிய இடங்களில் இருப்பதில்லை.
மலையக மக்கள் ஒரு நெருக்கமான சமூகமாக வாழ்ந்து பழகியவர்கள். அவர்களைப் பிரித்து ஆங்காங்கே குடியமர்த்துவது அவர்களின் ஒற்றுமையைச் சிதைக்கும்.
இது அவர்களின் கலாச்சார மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பாதிக்கும். மலையக மக்களின் வாக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட இடத்தில் செறிவாக இருப்பதால் அவர்களால் தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடிகிறது.
அவர்களைச் சிதறடித்து வேறிடங்களில் (குறிப்பாக பெரும்பான்மை இனத்தவர் வாழும் பகுதிகளுக்கு நடுவே) குடியமர்த்தினால் அவர்களின் வாக்கு பலம் நீர்த்துப்போகும். இது அரசியல் ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்தும் ஒரு உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் தலைநகரிலிருந்து அரசியல் செய்யும் சிலர் இங்குள்ள நிலைமைகளை முழுமையாக அறியாது ஏதாவதொன்றை பேச வேண்டும் என்பதற்காக இவ்வாறு நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை பேசி வருகின்றனர். இம்மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியமர்த்துவதை விட வேறு என்ன செய்யலாம்?
அவர்கள் வேலை செய்யும் தோட்டங்களுக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பான நிலங்களில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்திய அரசாங்கத்தின் பத்தாயிரம் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தம் நல்ல பாடத்தை புகட்டியுள்ளது. எனவே குறித்த வீட்டுத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களை மீள்பரிசீலனை செய்து அவை பாதுகாப்பானதா என்பதை உரியோர் உறுதி செய்ய வேண்டும்.
லயன் அறைகளை இடித்துவிட்டு அதே பகுதிகளில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய கிராமங்களை உருவாக்கலாம். மலையக மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கேயே அவர்களுக்கு நிலவுரிமையையும் தனி வீட்டையும் கொடுப்பதே சிறந்தது. அவர்களைப் பிய்த்து எறிந்து வேறிடத்தில் நடுவதால் வேர்கள் காய்ந்துபோகும் அபாயமே அதிகம்.
ஏற்கனவே காலம் காலமாக மலையகப் பெருந்தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு புதிய இடங்களின் காலநிலை, புவியியல் அமைப்பு மற்றும் இன்னோரன்ன காரணிகள் ஒத்துப்போவதில்லை.
ஆனால் முதலில் இந்த விவகாரத்தை பேசு பொருளாக்கிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் என்ன சொல்கிறார்?
‘மலையகத் தமிழர், மலையக மண்ணில் தான் வாழவேண்டும் என நானும் விரும்புகிறேன்.
ஆனால் பாதுகாப்பான காணி உரிமையை வழங்குவதற்கு மறுத்தால், எமது மக்கள் மலை மண்சரிவில் சிக்குண்டு தொடர்ச்சியாகப் பலியாவதா? எனவே மாற்று யோசனையாக வட, கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர்வினால் வெற்றிடங்களாகி காடாகிக்கொண்டிருக்கும் காணிகளை, அவற்றின் உரிமையாளர்கள் மனமுவந்து வழங்குவார்களாயின், அங்கு சென்று குடியேறி உழைத்து வாழ விரும்புகிறீர்களா என நான் சந்தித்த மக்களிடம் கேட்டேன்’ அவர்களும் சரி என்று கூறினர்’
இதே வேளை மனோ கணேசனின் கருத்தை பிரதிபலித்து வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்களும் இதை வரவேற்றுள்ளனர்.
எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், சுரேஷ் பிரேமசந்திரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் ‘மலையக மக்கள் விரும்பும் பட்சத்தில், அவர்களை மிகுந்த பாசத்தோடு வட, கிழக்குக்கு வரவேற்கத் தயாராக இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஒரு தனி அடையாளத்தையும், பாரம்பரிய கலாசாரத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் மலையகத் தமிழ்ச்சமூகத்தை வட, கிழக்கு மாகாணங்களில் குடியேற்றினால், நாளடைவில் அந்தச் சமூகத்தின் தனித்துவ அடையாளங்கள் அழிந்துபோகாதா?
தேயிலை, இறப்பர், தெங்கு என ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, இந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த அம்மக்கள், வட, கிழக்கில் குடியேறினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா? அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம் பின்தள்ளப்படாதா? என இந்த யோசனையின் பின்னால் பல யதார்த்தபூர்வமான கேள்விகள் இருக்கின்றன.
ஆனால் வடக்கு கிழக்கு பகுதி அரசியல் பிரமுகர்கள் சிலர் இந்த விடயம் குறித்து சாதகமான கருத்தை கூறியிருந்தாலும் சிலர் மலையக மக்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லையென்ற கருத்தையும் முன் வைத்துள்ளனர்.
யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு எம்.பியான டாக்டர் அர்ச்சுனா இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
முதலில் மலையக மக்களை யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு வருமாறு அழைக்கும் அவர், வீடியோவின் பிற்பகுதியில் மனோகணேசன் கொழும்பிலுள்ள அவரது சொத்துக்களை விற்று, அதனை புலம்பெயர் தமிழர்களுக்குச் செலுத்தி, அவர்களது காணிகளை வாங்கி, அதில் மலையக மக்களைக் குடியேற்றுமாறு கூறுகிறார்.
இங்கு அவர்கள் மத்தியில் இருக்கும் அரசியல் சலசலப்புக்கள் ஒருபுறமிருக்க, பல நூறு ஆண்டுகளாக பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை மீளவும் பந்தாடுவது எவ்வகையில் நியாயம்?
இந்த விவகாரம் அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருக்க திடீரென த.ம.கூ தலைவர் மனோ கணேசன் தான் எல்லா மலையக மக்களையும் வடக்கு கிழக்கில் குடியமர்த்துவது பற்றி கூற வில்லையென்றும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாத்திரமே தான் அவ்வாறு கூறியதாக அறிவித்துள்ளார்.
தனது கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கை விடுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மலையகப் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படவும் தயார் என்று கூறியுள்ளார்.

மனோ எம்.பி.
இந்த மக்களை வடக்கில் குடியேற்றினால் நுவரெலியா மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு என்ன ஏற்படும் என்பதை அறியாதவர் அல்லர் மனோ எம்.பி.
ஆனால் தனது கருத்து கூட்டணி கட்சிகள் இரண்டுக்கும் எதிரானதாவே உள்ளதை அவரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லையென்று தெரியவில்லை. அவரது கருத்துக்கு நுவரெலியா மாவட்ட கூட்டணி எம்.பிக்களான வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பி.திகாம்பரம் ஆகியோரின் பிரதிபலிப்புகளை இன்னும் அறியமுடியவில்லை.
எமது அடையாளம் ‘ மலையகம்’ என்பதாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கட்சிகள், இந்த மக்கள் வடக்கில் குடியமர்த்தப்பட்டால் அந்த அடையாளமும் அது சார்ந்த ஏனைய அம்சங்களையும் தம்மால் அங்கு தொடர முடியுமா என்பதை உறுதி செய்வார்களா?
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக வடக்கில் குடியேறியுள்ள மலையக மக்கள் அங்கு எந்த அடையாளத்தோடு அங்கு வாழ்ந்து வருகின்றார்கள், அவர்கள் எப்படி கவனிக்கப்படுகின்றார்கள் என்பதை மலையக பிரதிநிதிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.
மலையக மக்களை நாம் வரவேற்கிறோம் என்று கூறும் முன்னாள் எம்.பி சுமந்திரன் , வடக்கு மக்கள் அனைவரும் சொந்த காணியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துவாரா?
போருக்கு முன்னரும் பின்னரும் இராணுவத்தினாரால் கைப்பற்றப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டுள்ளனவா? இடர் காலங்களில் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்று மீண்டும் தமது தாயகப்பகுதிகளுக்கு திரும்பியுள்ளவர்களில் எத்தனைப்பேர் தமது சொந்த காணியில் குடியேற முடியாது தவித்து வருகின்றனர் என்பதை அறியாதவரா அவர்?
தமிழர் தாயகப்பகுதிகளில் இனப்பிரச்சினைக்கு அடுத்து தீர்க்க முடியாத பிரச்சினையாக இருப்பது காணி பிரச்சினை.
தமது சொந்த காணிகளில் குடியேற முடியாமல் தவித்து வரும் வடக்கு தமிழர்களின் பிரச்சினைகளே வானளவு இருக்கும் போது மலையக மக்களை எவ்வாறு வடக்கு அரசியல் வரவேற்கப் போகின்றது?

சுமந்திரன்
பல்வேறு காலகட்டங்களில் நாட்டின் அரசியல் காரணங்களுக்காக மலையகத்திலிருந்து வட பகுதிகளுக்கு உள்ளக இடப்பெயர்வை மேற்கொண்டு அங்கு வாழ்ந்து வரும் மலையக மக்கள் தன்னிறைவு அடைந்து விட்டனரா ? அவர்களுக்கான அரசியல் தெரிவை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ளும் காலம் பிறந்து விட்டதா?
தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் பரம்பரையாக வாழ்ந்து வரும் புவியியல் பிரதேசத்திலேயே தீர்க்க முடியவில்லையென்றால் இதை இவர்களின் அரசியல் வங்குரோத்துத் தனம் என்பதா அல்லது இவர்களின் அரசியல் காலாவதியாகி விட்டது எனக் கருதலாமா?
எனவே இந்த விவகாரத்தை அனர்த்த கால அரசியல் பேச்சாகவே பலரும் பார்க்கின்றனர். மலையக மண்ணில் பிறந்து வளர்ந்த மக்களுக்கு அங்கேயே சகல உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கும் வண்ணம் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சியிலிருந்து அழுத்தம் கொடுக்கும் வண்ணம் மலையகப் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்.
சி.சி.என்

