உக்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தனது தாக்குதல்களை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல்களால் அந்தப் பகுதியில் பரவலான மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா திட்டமிட்ட முறையில் இந்த பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைனின் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா தெரிவித்துள்ளார். மேலும், கருங்கடல் வழியாக நடைபெறும் தளவாடங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முடக்குவதற்கான ரஷ்யாவின் முயற்சியே இந்தத் தொடர் தாக்குதல்களின் பிரதான நோக்கம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

கருங்கடலில் ரஷ்யாவின் “நிழல் கடற்படை” என அழைக்கப்படும் எண்ணெய் கொள்கலன்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனின் கடல் வழிகளை துண்டிப்பதாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த “நிழல் கடற்படை” என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்களை குறிக்கும் சொல்லாகும்.

இந்த நிலையில், ஓடெசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலில் சிவில் கப்பல் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், தாக்குதல்களின் காரணமாக 1 இலட்சத்து 20 ஆயிரம் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு முக்கிய துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல்கள் உக்ரைனின் பொருளாதாரத்துக்கும், சர்வதேச கடல் வர்த்தகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply