ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம் தொடர்பில் விக்டோரியா மாகாண நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
34 வயதுடைய ஜோயல் மிக்கல்லெஃப், தனது காதலியான நிக்கிதாவை சொந்த வீட்டிலேயே நெருப்புக் கோலால் அடித்துக் கொன்ற சம்பவத்தில், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது செயல்களுக்கு சட்டபூர்வமாக பொறுப்பேற்க முடியாதவர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிக்கிதா, தனது காதலரை விட்டு வெளியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இந்த கொலைக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 26 அன்று, மெல்போர்னின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சவுத் மோராங் பகுதியில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த பின்னர் இரண்டு நாட்கள் வரை நிக்கிதாவின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் அவரது சகோதரர்கள் ஷான் மற்றும் டேரன், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, நிக்கிதாவின் சிதைக்கப்பட்ட உடலை கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த இரண்டு தடயவியல் மனநல மருத்துவர்கள், மிக்கல்லெஃப் கடுமையான மனநோய் மற்றும் சித்தப்பிரமை சார்ந்த மாயத்தோற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, அவரை சிறை தண்டனைக்கு பதிலாக தாமஸ் எம்பிளிங் உளவியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்ப்பை நிக்கிதாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
“இது திட்டமிட்ட கொலை. மனநோய் காரணம் காட்டி இந்த கொடூர செயலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்” என சகோதரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சம்பவத்திற்கு முன் நிக்கிதா தனது காதலரின் தந்தைக்கு குறுந்தகவல் அனுப்பி, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை தெரிவித்திருந்ததாகவும், 36 நிமிடங்கள் நடந்த அந்த குறுஞ்செய்தி உரையாடல் பின்னர் அழிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மனநல சட்டங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

