டொரண்டோ – கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த 30 வயதுடைய இந்தியப் பெண் ஹிமான்ஷி குரானா, கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில், அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி என்பவரை கைது செய்வதற்காக கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனதாக முறைப்பாடு
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.40 மணியளவில், ஹிமான்ஷி குரானா காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் காவல்துறையினருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சனிக்கிழமை காலை 6.30 மணியளவில், டொரண்டோவின் ஸ்ட்ராச்சன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், ஹிமான்ஷி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
திட்டமிட்ட கொலை
டொரண்டோ காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது ஒரு திட்டமிட்ட கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஹிமான்ஷி மற்றும் சந்தேகநபரான அப்துல் கபூரி இருவரும் நெருக்கமான காதல் உறவில் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதல்தரக் கொலை குற்றச்சாட்டு
இந்தச் சம்பவம் தொடர்பில் அப்துல் கபூரிக்கு எதிராக முதல்தரக் கொலை (First Degree Murder) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக கனடா முழுவதும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் இரங்கல்
இந்நிலையில், ஹிமான்ஷி குரானாவின் மரணம் குறித்து ரொறொன்ரோவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்த யுவதியின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து தூதரக உதவிகளும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

