தெற்கு கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கடற்றொழில் படகில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த படகு இன்று (24.12.2025) காலை திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது 11 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகள் இருந்ததை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் கைப்பற்றப்பட்ட நீண்ட நாள் கடற்றொழில் படகும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் கடற்படை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

