– 3 நாட்கள் துக்க தினம் பிரகடனம்

துருக்கியில் இடம்பெற்ற கோர விமான விபத்தில், லிபிய இராணுவப் பணிக் குழாம் பிரதம அதிகாரி ஜெனரல் மொஹமட் அலி அஹமட் அல்-ஹத்தாத் மற்றும் அவருடன் பயணித்த நான்கு அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக லிபிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் பயணித்த Falcon 50 ரக விமானம், துருக்கியின் தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (23) இரவு 8.52 மணியளவில் இவ்வாறு தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

விமானம் காணாமல் போவதற்கு முன்னர், விமானி அவசர தரையிறக்கத்திற்கான கோரிக்கையை விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தின் சிதைவுகள் அங்காராவின் தென்மேற்கே உள்ள ஹெய்மானா மாவட்டத்தின் கெசிக்கவாக் (Kesikkavak) கிராமத்திற்கு அருகில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவப் பணிக் குழாம் பிரதம அதிகாரி ஜெனரல் ஹத்தாத் தலைமையிலான குழுவினர், துருக்கி மற்றும் லிபியா இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்காக துருக்கி சென்றிருந்தனர்.

துருக்கிய பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடல்களை முடித்துக்கொண்டு, லிபியாவின் திரிப்போலி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இந்த உயிரிழப்பானது லிபிய தேசத்திற்கு ஏற்பட்ட “பெரும் இழப்பு” என லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் தபீபா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து, லிபியாவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில், லிபியாவின் தேசிய ஒருமைப்பாடு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் லிபிய ஆயுதப் படைகளில் உள்ள அவர்களது சக ஊழியர்களுக்கும் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விசாரணைகள் தற்போது துருக்கிய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply