இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், விவாகரத்து கேட்ட மனைவியை கணவன் சாலையில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதுடைய புவனேஷ்வரி, பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலமுருகன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், புவனேஷ்வரி சமீபத்தில் கணவர் பாலமுருகனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
சாலையில் வைத்து துப்பாக்கிச் சூடு
இந்த நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய புவனேஷ்வரியை பெங்களூருவில் ஒரு சாலையில் கணவர் பாலமுருகன் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த புவனேஷ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்
சம்பவத்திற்குப் பின்னர், பாலமுருகன் துப்பாக்கியுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் புவனேஷ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த புவனேஷ்வரியின் பெற்றோருக்கு தமிழ்நாட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

