ஆஷஸ் தொடருக்காக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் அதிக அளவில் மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணி தொடரை ஏற்கனவே இழந்துள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே அவுஸ்திரேலியாவின் நூசா பகுதியில் வீரர்கள் எடுத்த இடைவேளையின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஒரு பேச்சிலர் பார்ட்டி குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் (Ben Duckett) போதையில் இருப்பது போல் தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்குள் மது அருந்தும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், அது அணியின் ஒழுக்கம் மற்றும் செயல்திறனை பாதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் தனது சக வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில்,

“இந்த சூழ்நிலையை நான் எப்படி கையாள்கிறேன் என்பதே எனக்கு மிகவும் முக்கியமானது. இங்கு இருக்கும் அனைவரின் நலனும், குறிப்பாக சில தனிநபர்களின் நலனும், இங்கிலாந்து அணியின் கேப்டனாக எனக்கு முதன்மையான விடயமாகும்.”

என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

“கேப்டனாக என்னால் முடிந்தவரை என் வீரர்களை பாதுகாப்பது என் கடமை. இந்த சுற்றுப்பயணத்தில் நாங்கள் இன்னும் சாதிக்க வேண்டிய ஒரு இலக்கு உள்ளது. அது இதுவரை நாங்கள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும், வீரர்களின் மனநிலையை பாதுகாப்பதே இப்போது முக்கியம்.”

எனவும் கூறினார்.

அத்துடன்,

“என் வீரர்களை கவனித்துக் கொள்வதே இந்நிலையில் நான் செய்ய வேண்டிய முக்கியமான விடயமாகும். ஏனெனில், நாங்கள் இன்னும் களத்தில் இறங்கி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது.”

என்று பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தினார்.

பென் டக்கெட் தொடர்பான வைரல் வீடியோ மற்றும் மது அருந்தல் குற்றச்சாட்டுகள் காரணமாக இங்கிலாந்து அணியின் ஒழுக்கம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply