களுத்துறை:
களுத்துறை மாவட்டத்தில் கொத்து ரொட்டி சாப்பிட்டதன் பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்பத்த – பட்டகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய, திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து சுமார் 8.30 மணியளவில் வீடு திரும்பிய மகேஷ், தனது சகோதரருடன் சேர்ந்து கொத்து ரொட்டியை உணவாக எடுத்துக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் கல்பத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அடிப்படை சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் நிலை மோசமடைந்ததை அடுத்து ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதே கொத்து ரொட்டியை சாப்பிட்ட அவரது சகோதரருக்கு எந்தவித உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரேத பரிசோதனை ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன தலைமையில் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அங்குருவத்தொட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

