பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, வரவிருக்கும் பொதுத் தேர்தலைச் சீர்குலைப்பதற்காக மாணவர் தலைவர் ஷரீஃப் உஸ்மான் ஹாதியை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக அவரது சகோதரர் உமர் ஹாதி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு வெளியான சில மணி நேரங்களிலேயே, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக பணியாற்றிய முகமது குதா பக்ஸ் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதனிடையே, இந்த கொலை தொடர்பான விசாரணையை 90 நாள்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றும் சட்டத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் உறுதியளித்துள்ளார்.
மாணவர் போராட்டங்களின் முன்னணி முகம்
ஷரீஃப் உஸ்மான் ஹாதி, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். இந்தியா மற்றும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தீவிர அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர், வரவிருக்கும் பிப்ரவரி மாத பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.
சுட்டுக் கொலை – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடந்த டிசம்பர் 12ஆம் திகதி, டாக்காவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால் ஹாதி தலையில் சுடப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
டாக்காவில் வெடித்த போராட்டங்கள்
ஹாதியின் கொலையை கண்டித்து டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் அவரது சகோதரர் உமர் ஹாதி பேசுகையில்,
“ஆட்சியில் இருப்பவர்கள் ஹாதியை கொன்றுவிட்டு, இப்போது அந்த சம்பவத்தை பயன்படுத்தி தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்கின்றனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லையெனில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைப் போல நீங்களும் நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை வரும்” என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி, சட்டத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் மற்றும் சிறப்பு உதவியாளர் குதா பக்ஸ் சௌத்ரி ஆகியோர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக குதா பக்ஸ் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
வன்முறை, பதற்றம் மற்றும் தீவிர சம்பவங்கள்
ஷரீஃப் உஸ்மான் ஹாதியின் மறைவுக்கு பிறகு வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருகிறது. டாக்காவில் உள்ள ‘டெய்லி ஸ்டார்’ உள்ளிட்ட முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
மேலும், மைமென்சிங் மாவட்டத்தில் தீபு சந்திர தாஸ் (25) என்ற ஹிந்து தொழிலாளி ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.
இந்தியா தொடர்பான வதந்திகள் – விசாரணை கோரிக்கை
ஹாதி கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக சில ஆதாரமற்ற வதந்திகள் வங்கதேசத்தில் பரப்பப்படுவதைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா, வங்கதேசத் தூதரை நேரில் வரவழைத்து வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, வங்கதேசத்தின் தென்கிழக்கு துறைமுக நகரமான சட்டோகிராம் பகுதியில் ஹிந்துக்கள் வீடுகளை எரித்த கும்பல் குறித்து தகவல் வழங்குவோருக்கு பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

