வைத்தியர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

நாட்டுக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சில வகை மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு, இளைஞர்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் கயான் ஏகநாயக்க, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்த மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகள் வெளியில் தெரியும்வகையில் அமைந்துள்ளதால், அவற்றை சுத்தம் செய்யும் போது பல இளைஞர்களின் கைகளின் விரல்கள் துண்டிக்கப்படுவதோ அல்லது கடுமையாக நசுக்கப்படுவதோ போன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன என தெரிவித்தார். இவ்வாறான விபத்துகளால் நாளாந்தம் ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த தகவல்களின் படி, மோட்டார் சைக்கிள் விற்பனை பிரதிநிதிகள், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சங்கிலிகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த நடவடிக்கையின்போதே இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வைத்தியர் கயான் ஏகநாயக்க மேலும் கூறுகையில், இவ்வாறு விரல்கள் துண்டிக்கப்பட்டாலோ அல்லது நசுக்கப்பட்டாலோ, அவற்றை மீண்டும் இணைப்பது மருத்துவ ரீதியாக மிகவும் கடினமானது என்றும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலமாக கூட அந்த விரல்களை முந்தைய நிலைக்கு முழுமையாக மீட்டெடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, விலைமதிப்பற்ற இளம் உயிர்களின் எதிர்காலம் நிரந்தரமாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகி வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். இவ்வாறான விபத்துகள் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மட்டுமன்றி, வெளி மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அதிகளவில் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை சுத்தம் செய்யும் போது பாதுகாப்பான முறைகள் மற்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்தியர் கயான் ஏகநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply