KVN புரொடக்ஷன்ஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜன நாயகன்’ திரைப்படம், ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு திரையிடப்படவிருந்த இந்த திரைப்படம், தயாரிப்புத் தரப்பின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில சூழ்நிலைகளால் தற்போது வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு தங்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் காட்டி வரும் அளவற்ற அன்பையும் ஆர்வத்தையும் மதிப்பதாகவும், தொடர்ந்து பொறுமையுடன் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த திடீர் அறிவிப்பு, ‘ஜன நாயகன்’ படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும் வரை அமைதியாக காத்திருக்குமாறு படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாகக் கருதப்படுவதால், அதன் வெளியீட்டு அறிவிப்பு மீண்டும் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share.
Leave A Reply