அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ஓட்டங்களை குவித்தது.
இதற்கு பதிலளித்த அவுஸ்திரேலிய அணி, அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 138 ஓட்டங்களும், வெப்ஸ்டர் 71 ஓட்டங்களும் விளாச உதவியுடன் 567 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கார்ஸ் மற்றும் டங் தலா 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, மிட்செல் ஸ்டார்க் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். ஜக் கிராவ்லே 1 ஓட்டத்தில் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இணைந்து நிலைநிறுத்தினர். டக்கெட் 55 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார். தொடர்ந்து வந்த ஜோ ரூட் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் களம் கண்டார்.
இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக்கப் பெத்தேல் அரைசதம் கடந்த பின்னர், பொறுமையுடன் விளையாடி தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 99 ஓட்டங்களில் இருந்த நிலையில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு பவுண்டரி ஒன்றின் மூலம் 100 ஓட்டங்களை எட்டினார்.
இந்த சதத்தின் மூலம், ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜேக்கப் பெத்தேல் தனது பெயரை சேர்த்துள்ளார்.

