ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள நிலையில், அதனை நம்ப முடியாது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது குறித்து தெளிவாக வாய் திறந்து பேசவில்லை என்றும், இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் கூறும் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்வது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசு இதுவரை தமிழ் மக்களுக்கு வழங்கிய பல முக்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கம் செய்தல் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு ஆகியவை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி முப்படைகளின் தளபதியாக இருக்கும் நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளை விரைவாக விடுவிக்க முடியும் என்றும், ஆனால் ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த அளவிலான காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படும் என அரசு முன்னர் தெரிவித்திருந்ததை நினைவூட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன், அதன் மாற்றாக எவ்வகையான அரசியல் அமைப்பு கொண்டு வரப்படவுள்ளது என்பது குறித்து அரசால் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். சமஷ்டி முறையா அல்லது வேறு விதமான அதிகாரப் பகிர்வா என்பது தொடர்பிலும் அரசின் நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, கடந்த கால அரசுகளைப் போலவே தற்போதைய அரசும் தமிழ் மக்களை ஏமாற்றும் போக்கில் செயற்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் நடைமுறை ரீதியான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply