பாகிஸ்தான் பயங்கரவாத தலைவர் மசூத் அசார், இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயாராக இருப்பதாக ஆடியோ ஒன்றில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Masood Azhar Alleged Audio Message: ஐக்கிய நாடுகள் அமைப்பால் பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்பட்ட மசூத் அசார் பேசியதாக ஒரு ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசார் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத சதிச் செயல்களை நீண்ட காலமாக திட்டமிட்டு வருபவர் ஆவார்.
Masood Azhar: மசூத் அசார் குடும்பத்தினர் பலி
கடந்த ஏப்ரல் மாதம் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இந்திய படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மே மாதத்தில் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மசூத் அசாரின் குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் மசூத் அசாரை கடுமையாக பாதித்ததாக கூறப்பட்டது. அதன்பின், இந்தியா – பாகிஸ்தான் அரசுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவானதை தொடர்ந்து தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் ஓரளவு குறைந்திருக்கிறது.
Masood Azhar: மசூத் அசாரின் ஆடியோ
இந்தச் சூழலில், மசூத் அசாரின் ஆடியோ பதிவு வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மசூத் அசார் பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோ பதிவில், எப்போது வேண்டுமானாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் தொடுக்கலாம் என அவர் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், மொத்தம் எத்தனை பேர் அந்த தற்கொலை படை குழுவில் இருக்கிறார்கள் என பொதுவெளியில் சொன்னால் உலகமே அதிர்ச்சியில் உறைந்துவிடும் என்றும் அவர் அதில் பேசியுள்ளார் என கூறப்படுகிறது.
Masood Azhar: 1000க்கும் மேலான தற்கொலை படையினர்
அந்த ஆடியோவில், “இந்த தற்கொலை படையில் ஒருவரல்ல, இருவரல்ல, 100 பேர் அல்ல, 1,000 பேர் அல்ல… முழுமையான எண்ணிக்கையையும் நான் உங்களிடம் சொன்னால், நாளை உலக ஊடகங்களே நடுக்கத்தை கண்டுவிடும்” என மசூத் அசார் பேசியிருக்கிறார்.
மேலும் தற்கொலை படையில் உள்ள ஒவ்வொருவரும் தாக்குதல் தொடுக்க அதிக ஊக்கம் பெற்றுள்ளனர் என்றும் அவர்கள் இதற்காக தங்களின் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் மசூத் அசார் அதில் பேசியிருக்கிறார்.
இருப்பினும் Zee Tamil News அந்த ஆடியோவை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யவில்லை, இதனால் அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்ட தேதி, இடம் ஆகியவை உறுதிசெய்யப்படவில்லை.
Masood Azhar: பயங்கரவாதியின் நிதி திரட்டல்
இது ஒருபுறம் இருக்க, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லக்ஷர்-இ-தொய்பா உள்ளிட்ட பாகிஸ்தானை அடிப்படையாக வைத்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் காசா மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு என கூறி, நிதி திரட்டல் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது மறைமுகமாக தங்களின் அமைப்புகளை வளர்த்தெடுக்கவும், மத செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். இந்த நிதி திரட்டலுக்கு பின்னணியில் மசூத் அசாரின் மகனும், சகோதரரும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மசூத் அசார் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத கருத்துகளை தெரிவித்து வருகிறார். மேலும் இந்தியாவில் நடந்த 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இவர் மூளையாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

