கடந்த நான்கு ஆண்டுகளாக மலையகத்தில் சமூக மற்றும் அரசியல் களங்களில் காத்திரமாக இயங்கி வந்த ‘மலையக அரசியல் அரங்கம்’, தற்போது இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் செயலதிபரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட புதிய கட்சியாகத் தங்களுக்கு ‘சிறகு’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை முன்னெடுத்தல், பெண்களுக்குச் சமமான அரசியல் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடந்த ஒற்றுமையை உருவாக்குதல் போன்ற இலக்குகளுடன் இக்கட்சி 2026-ஆம் ஆண்டு முதல் தனது அரசியல் பயணத்தைத் தீவிரப்படுத்தவுள்ளது.

