வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் வரும் ஜனவரி 19-ம் திகதி முதல் மார்ச் 31-ம் திகதி வரை மஹோ சந்தி வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் – மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளப் பாதைகளைச் சீரமைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவைகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த ரயில் பாதைகளைச் சீரமைக்க இந்திய அரசாங்கம் வழங்கிய 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடபகுதிக்கு பயணம் செய்யும் பயணிகள் இந்த கால அட்டவணை மாற்றத்தைக் கவனித்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

