புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் (உந்துருளி), வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், வேனில் பயணித்தவர்கள் மற்றும் உந்துருளியில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், முந்தலம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

