1964-ம் ஆண்டு,.. மே 27-ம் தேதி. உடல் நலம் குன்றியிருந்த பிரதமர் நேரு திடீரென காலமானார்.

அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான அந்தச் செய்தியைக் கேட்டு நாடே சோகமயமானது!

நேரு மறைவைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ஏற்றார் லால் பகதூர் சாஸ்திரி. இவர் நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்குச் சொந்த வீடு கிடையாது.

ஆகையால், `Home Minister’ ஆன இவரை `Homeless Minister’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்கள்.

எளிமையான அரசியல்வாதி யான சாஸ்திரி, பிரதமராக வந்தவுடன் சிக்கலான ஒரு முடிவை எடுத்தார். அந்த முடிவு, தமிழகத்தைப் போர்க்களம்போல மாற்றியது.

திரு.லால்பகதூர் சாஸ்திரி

உடல் மண்ணுக்கு… உயிர் தமிழுக்கு!

1965-ம் ஆண்டு, ஜனவரி மாதம். ‘உடல் மண்ணுக்கு… உயிர் தமிழுக்கு’, ‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக’ என்ற முழக்கங்கள் தமிழகமெங்கும் ஒலித்தன.

காரணம்… ‘மத்திய ஆட்சி மொழியாக’ இந்திக்கு மகுடம் சூட்ட, சாஸ்திரி அரசு நாள் குறித்ததைக் கண்டு தமிழக மாணவர்கள் கொதித்து எழுந்தனர்.

அலுவல் மொழியாக இந்தியும், இணை அலுவல் மொழியாக ஆங்கிலமும் இருந்துவந்த நிலையில், ‘1965-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் தேதி முதல் ‘இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும்’ என்று மத்திய அரசு முடிவெடுத்தது.

‘இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்கள் விரும்புகிற வரை, அலுவல் மொழிகளில் ஒன்றான ஆங்கிலம் அகற்றப்படாது’ என்று 1962-ம் ஆண்டு பிரதமர் நேரு மக்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இப்படியொரு முடிவை எடுத்தார் சாஸ்திரி.

ஜனவரி 8-ம் தேதி, தி.மு.க செயற்குழு அவசர அவசரமாக சென்னையில் கூடியது.

அதில், ‘ஜனவரி 26-ஐ துக்க நாளாகக் கடைப்பிடிப்பது’ என்று முடிவெடுக்கப்பட்டது.

அப்படியே, பிரதமர் சாஸ்திரிக்கு ஒரு கடிதம் எழுதினார் அண்ணா. அதில், ‘இந்தித் திணிப்பை ஒரு வாரம் தள்ளிப்போட்டால், மற்றவர்களுடன் சேர்ந்து தி.மு.க-வால் குடியரசு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பிரதமர் சாஸ்திரி, தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

அடிபணிந்த ஆட்சியாளர்கள்!

தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் வெடித்தது. இந்திப் புத்தகங்களையும், அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி மொழி குறித்த பக்கங்களையும் மாணவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

ரயில் நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் இந்திப் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன.

காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

வேலை நிறுத்தம், கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தடியடி, துப்பாக்கிச்சூடு எனத் தமிழகம் போர்க்கோலம் பூண்டது.

அண்ணா, மு.கருணாநிதி, க.அன்பழகன், இரா. நெடுஞ்செழியன் உட்பட ஆயிரக்கணக்கான தி.மு.க-வினர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தித் திணிப்பை எதிர்த்து, பல இளைஞர்கள் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.

போராட்டத்தை ஒடுக்க, கடும் அடக்குமுறைகளைக் கையாண்டது காவல்துறை. அதிகாரபூர்வப் புள்ளிவிவரப்படி, போலீஸின் துப்பாக்கிச்சூட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அத்தனை உயிரிழப்புகளையும் தாண்டி, போராட்டத்தை மிகவும் உறுதியுடன் மாணவர்கள் முன்னெடுத்தனர். அதனால், ஆட்சியாளர்கள் அடிபணிந்தனர்.

‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழியை நிறைவேற்றுவோம்’ என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன்.

இதையடுத்து, ‘போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக’ மார்ச் 14-ம் தேதி மாணவர்கள் அறிவித்தனர்.

தருமபுரி இடைத்தேர்தல்!

மொழி, இனம், மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை காங்கிரஸ் அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியது.

அதனால், மக்களிடமிருந்து காங்கிரஸ் அந்நியப்பட்டுவந்தது. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை எகிறியதால், காங்கிரஸ் அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

அதனுடன், மாணவர் போராட்டமும் சேர்ந்துகொண்டது. அதனால், காங்கிரஸின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்தது.

இந்த நிலையில், தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 1965-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்றது. அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு பெரியாரும், தி.மு.க வேட்பாளருக்கு ராஜாஜியும் ஆதரவளித்தனர்.

தி.மு.க வேட்பாளரை ஆதரிப்பது என சி.பி.எம் முடிவுசெய்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனியாக வேட்பாளரை நிறுத்தியது.

தி.மு.க-வைக் கடுமையாக எதிர்த்த பெரியார், ‘தருமபுரி வாக்காளர்களே, உஷார்… கலவரக்காரர்களை ஆதரிக்காதீர்.

தி.மு.க-வுக்கு வாக்களித்தால் கலவரம்தான் நடக்கும்’ என்று ‘விடுதலை’ ஏட்டில் எழுதினார். தி.மு.க-வை ஆதரித்த ராஜாஜி, ‘ஒரு கையில் பூணூலைப் பிடித்துக்கொள்ளுங்கள்… கண்ணை மூடிக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்’ என்று பிராமணர் சமூகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

`வெற்றி நமக்குத்தான்’ என்று நம்பியிருந்த தி.மு.க-வினருக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தனர் தருமபுரி வாக்காளர்கள். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

கிங் மேக்கர்’ காமராஜர்!

பிரதமராகப் பதவியேற்று 214 நாள்களே ஆகியிருந்த நிலையில், லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து,

நேருவின் புதல்வி இந்திரா காந்தி (1966, ஜன. 24) பிரதமராகப் பதவியேற்றார்.

அப்போது அவருக்கு 48 வயதே ஆகியிருந்தது. நேரு மறைவுக்குப் பிறகு, சாஸ்திரியையும், அதன் பிறகு இந்திரா காந்தியையும் பிரதமராகத் தேர்வுசெய்ததில் முக்கியப் பங்காற்றியவர் ‘கிங் மேக்கர்’ காமராஜர்.

பொதுத்தேர்தலை மிகுந்த ஆவலுடன் தி.மு.க எதிர்பார்த்திருந்த வேளையில், ‘1967-ம் ஆண்டு பிப்ரவரி 17, 21 ஆகிய தேதிகளில் தேர்தல்’ என்ற அறிவிப்பை, தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

காங்கிரஸுக்கு எதிராக விரிவான கூட்டணியை உருவாக்குவதற்கு அண்ணா முயன்றார்.

ஏற்கெனவே, தி.மு.க-வுடன் சுதந்திரா கட்சியும், முஸ்லிம் லீக்கும் கூட்டணியில் இருந்தன.

புதிதாக சி.பி.எம் கட்சியைக் கூட்டணிக்குள் கொண்டுவர அண்ணா முயன்றார். ஆனால், பிற்போக்கு கொள்கையைக்கொண்ட சுதந்திரா கட்சி இருப்பதால், அந்தக் கூட்டணியில் சேர சி.பி.எம் தயங்கியது.

அந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, ‘சி.பி.எம் விரும்பினால், சுதந்திரா கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை சி.பி.எம் நிறுத்திக்கொள்ளலாம்’ என்றார் அண்ணா.

அதையடுத்து, தி.மு.க கூட்டணிக்குள் சி.பி.எம் வந்தது. ‘தி.மு.க-வை ஆதரிக்கிறோம். ஆனால், சுதந்திரா கட்சிக்கும், எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது’ என்று சி.பி.எம் தெளிவுபடுத்தியது.

மேலும், தி.மு.க கூட்டணியில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி, உழைப்பாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழரசுக் கழகம், சி.பா.ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவையும் இடம்பெற்றன.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி!

தி.மு.க-வின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்திருந்தாலும், செல்வந்தர்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸுடன் மோதுவதற்கு நிதி தேவையாக இருந்தது.

தேர்தல் நிதி திரட்டும் பணியில் தி.மு.க-வினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேர்தல் நிதிக்காக, அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகம் பல இடங்களில் நிகழ்த்தப்பட்டது. அதில் அண்ணா நடித்துவந்தார். நாடகத்தில் நடிப்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்தார் அண்ணா.

இடையில் கார் பழுதாகி நின்றது. உடனடியாகச் செல்லவேண்டிய அவசரம் அண்ணாவுக்கு. அந்த நேரத்தில், வைக்கோல் லோடு ஏற்றிய லாரி ஒன்று அந்த வழியாக வந்தது. அதில் ஏறிச் சென்றார் அண்ணா.

இப்படியாக, கட்சித் தலைவர் அண்ணா தொடங்கி கடைக்கோடி தொண்டர்கள் வரை தேர்தலில் வெற்றிபெறக் கடுமையாக உழைத்தனர்.

அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக ஏறியிருந்தது.

முதல்வர் பக்தவத்சலம் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அப்போது, ‘காமராஜர் அண்ணாச்சி, கடலைப் பருப்பு விலை என்னாச்சு..?’, ‘பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சு..?’ என்ற கோஷங்களைத் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க-வினர் எழுப்பினர்.

‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்குவோம்’ என்ற வாக்குறுதியை அண்ணா வழங்கினார்.

அது, மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர்.ராதா!

1967, ஜனவரி முதல் நாளன்று தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அண்ணா.

அதில், பரங்கிமலை வேட்பாளராக எம்.ஜி.ஆரின் பெயர் இடம்பெற்றது.

இந்த நிலையில், தமிழகத்தையே அதிரச்செய்த சம்பவம் ஒன்று, ஜனவரி 12-ம் தேதி நிகழ்ந்தது. ராமாவரம் தோட்டத்தில்வைத்து எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டார் எம்.ஆர்.ராதா.

தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆர் கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்துடன், தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அது, தி.மு.க-வுக்கு அனுதாப அலையாக மாறியது. தேர்தல் முடிவுகள் வெளியாகின.

ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தமிழகத்தின் மீது திரும்பியது. மிகப்பெரிய வெற்றியை தி.மு.க பெற்றது.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. காமராஜரே தோற்றுப்போனார்.

அந்தத் தேர்தல் முடிவுகளின் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அடுத்த இதழில் காண்போம்!

(இன்னும் அறிவோம்)

கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு!

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் குணாம்சம், அதன் அணுகுமுறை ஆகியவை குறித்து 1950-களின் இறுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் எழுந்தன.

‘நேருவின் கரங்களை வலுப்படுத்துவோம்’ என்ற நிலையை ஒரு தரப்பும், அதற்கு எதிரான நிலையை மற்றொரு தரப்பும் எடுத்தன.

1962-ம் ஆண்டு இந்தியா – சீனா போர் வெடித்தபோது, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொள்கைப் போர் உச்சத்தை அடைந்தது.

பி.ராமமூர்த்தி, பி.சுந்தரய்யா, இ.எம்.எஸ்., என்.சங்கரய்யா உட்பட 32 தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற புதிய கட்சியை 1964-ல் தோற்றுவித்தனர்!  :”‘கலவரக்காரர்களை ஆதரிக்காதீர்… தி.மு.க-வுக்கு எதிராக பெரியார் பிரசாரம்!

(இன்னும்அறிவோம்)

சட்டமன்றத்தில் ஒலித்த திராவிட குரல்கள்! – தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-6)

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தார் அண்ணா!!: தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-7)

 

Share.
Leave A Reply