இஸ்ரேல் அதன் அண்மைக்கால போர்க் குற்றங்களில் ஒன்றாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களை அங்கீகரிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேல் அரசாங்கம் அதன் குடியேற்ற விரிவாக்க முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்தே இதற்கு காரணம்.
தீவிர வலதுசாரி போக்கு நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், இந்த முடிவு ஒரு பலஸ்தீன அரசை நிறுவுவதைத் தடுக்கும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மேற்குக் கரையை “நடைமுறையில் இணைக்கும்” கொள்கையை இஸ்ரேல் இயற்றும் என்ற தனது கூற்றை பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மீண்டும் வலியுறுத்தியும் உள்ளார்.
கிழக்கு ஜெருசலேமை உள்ளடக்கிய மேற்குக் கரையின் பலஸ்தீனப் பகுதி 1967 ஜூன் 7 முதல் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
ஆறு நாள் போரின் போது இஸ்ரேலிய படைகள் இப்பகுதியைக் கைப்பற்றின. பின்னர் ஜோர்டானால் ஆளப்பட்டது. இன்று இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக மேற்குக் கரையின் அந்தஸ்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றம் (ஐ.சி.ஜே) மற்றும் இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 1967 முதல் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறி மேற்குக் கரை முழுவதும் ஏராளமான யூத குடியேற்றங்களை மட்டுமே நிறுவியுள்ளது.
அந்தப் பிராந்தியத்தில் குடியேற்றங்கள் “சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாக” ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நீதிமன்றமான ஐ.சி.ஜே இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்றும் கண்டறிந்துள்ளது.
மேற்குக் கரையில் 2,747,943 பலஸ்தீனர்கள் மற்றும் 700,000 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேறிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் சுமார் 220,000 பேர் கிழக்கு ஜெருசலேமில் வாழ்கின்றனர். இன்றைய நிலவரப்படி பல ஆண்டுகளாக மேற்குக் கரை பிரதேசம் (கிழக்கு ஜெருசலேம் தவிர்த்து) சுமார் 175 உத்தியோகபூர்வ குடியேற்றங்களையும் 200 முதல் 220 அங்கீகரிக்கப்படாத புறக்காவல் நிலையங்களையும் 470,000 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேறியவர்களையும் உள்ளடக்கி உள்ளது.
குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மேலும் தொடருகின்றது. இதில் 2025 இல் அங்கீகரிக்கப்பட்ட புதிய குடியேற்றங்கள் மற்றும் அதிக புறக்காவல் நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சிகளும் அடங்கும். .
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு மத்தியில் 2025 மே மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 22 புதிய யூத குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சில தசாப்தங்களில் இது மிகப் பெரிய விரிவாக்கமாகும். இஸ்ரேலிய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட சியோனிச யூத பயங்கரவாதிகள் பலஸ்தீன மக்களது நிலங்களை அபகரிக்கும் வகையில் அவர்களை தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றுவதற்காக அவர்கள் மீது வன்முறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போரினால் உலகத்தின் கவனம் திசை திருப்பப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் மேற்குக் கரையில் அதன் வன்முறைத் தாக்குதல்களைத் தூண்டியது. அதே போல் யூத குடியேற்ற பயங்கரவாதிகள் பலஸ்தீன கிராமவாசிகளைத் தாக்கிக் கொன்றனர். இவை தொடர்பான உலக மௌனமும் அதிகரித்தது.
2023 அக்டோபர் 7முதல் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தனது வன்முறையை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் 1,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவற்றின் இடையில் தெற்கு ஹெப்ரோன் மலைகளில் உள்ள 12 சமூகங்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் முயற்சிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
நிராயுதபாணிகளான பொதுமக்களைக் கொல்வது, அந்தக் குடும்பங்கள் தங்கள் கொலை செய்யப்பட்ட அன்புக்குரியவர்களை அடக்கம் செய்வதைத் தடுப்பது மற்றும் வெகுஜன இடப்பெயர்ச்சியைத் தூண்டுவதற்காக முழு சுற்றுப்புறங்களையும் தரைமட்டமாக்குவது போன்ற எண்ணற்ற மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் சர்வ சாதாரணமாகச் செய்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதி முகாம்களில் இருந்து பலஸ்தீனர்களை இஸ்ரேலிய இராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இடம்பெயர வைத்தமையானது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 105 பக்க அறிக்கையில் கூறியுள்ளது.
மிக அண்மைக் காலங்களில் இஸ்ரேலிய இராணுவம் 32,000 பலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜெனின், துல்கரேம் மற்றும் நூர் ஷாம்ஸ் ஆகிய அகதி முகாம்களில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து இந்த கட்டாய வெளியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
“சர்வதேச சட்டப் பாதுகாப்புகளைப் பொருட்படுத்தாமல்” இவை மேற்கொள்ளப்பட்டன. மேலும் இஸ்ரேல் பலஸ்தீன குடியிருப்பாளர்களை திரும்பி வர அனுமதிக்கவில்லை என்று எச். ஆர். டபிள்யூவின் அகதி மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் தொடர்பான மூத்த ஆராய்ச்சியாளர் நதியா ஹார்ட்மேன் கூறினார்.
யுத்தக் குற்றங்களின் சகாக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் யாஹுவின் தீவிரவாத அரசாங்கம் மேற்குக் கரையை முறையாக இணைத்துக் கொள்ள அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.
இது ஏற்கனவே நடைமுறை ரீதியான இணைப்பு மற்றும் நிறவெறி கொள்கையின் கீழ் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பரிமாற்றத்தின் மிகவும் வெளிப்படையாக புலப்படும் அம்சம் தான் டிசம்பர் 2022 இல் உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் தற்போதைய அரசாங்கத்தின் இனவெறி அமைப்பு முறையாகும்.
முதல் தடவையாக முக்கிய அமைச்சு பதவிகள் சட்டத்தை துச்சமென மதிக்கும் நபர்கள் மத்தியில் மிக வெளிப்படையாகப் பகிரபட்டுள்ளன. இவர்கள் சட்டவிரோத குடியேற்ற சார்பு சித்தாந்தங்ளைக் கொண்டவர்கள். மற்றும் குடியேற்றங்களுக்கு சார்பான இயக்கங்களின் மிகவும் வன்முறையான நீரோடைகளுடன் தனிப்பட்ட உறவுகளையும் கொண்டவர்கள்.
அந்த வகையில் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் போன்ற நபர்கள்-தீவிரவாத சித்தாந்தங்கள் என்று விவரிக்கப்பட்ட குடியேற்றவாசிகளையும் அவர்களின் குடியேற்ற வன்முறைகளையும் எளிதாக்கும் மற்றும் சட்டப்பூர்வமாக்கும் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தியதில் ஆச்சரியமில்லை.
பலஸ்தீன கைதிகளை தடுத்து வைத்திருக்க அந்த இடங்களைச் சுற்றி “முதலைகளைக் கொண்ட தடுப்பு வசதியை” உருவாக்க முன்மொழிந்தவர் தான் பென் க்விர்.
அவரது ஓட்ஸ்மா யெஹுடிட் கட்சியின் யிட்ஷாக் வாஸர்லௌஃப் மூலம் இந்த யோசனை எதிரொலித்தது.. “இஸ்ரேலின் நிலம் இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. பலஸ்தீன மக்கள் என்று ஒரு பிரிவு இல்லை. பலஸ்தீன அரசும் இல்லை” என்று வாஸர்லௌஃப் அறிவித்தார்.
சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்க திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது நெதன்யாகு “பலஸ்தீன அரசு என்று ஒன்று இருக்காது; இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது” என்று அறிவித்தார்.
“கடந்த சில ஆண்டுகளில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றவாசிகள் பலஸ்தீன மக்கள் மீது அதிக சக்தியையும் கட்டுப்பாட்டையும் செலுத்துவதன் தாக்கத்தை நாங்கள் கான முடிகின்றது” என்று ஜெனின் மற்றும் துல்கரேமில் உள்ள டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் (எம்.எஸ்.எவ்.) (எல்லைகளற்ற வைத்தியர்கள் என்ற மனிதாபிமான சேவை அமைப்பு) திட்ட ஒருங்கிணைப்பாளர் சிமோனா ஒனிடி செப்டம்பரில் தெரிவித்திருந்தார்.
“இந்த நடவடிக்கைகள் யாவுமே மிக விரைவான குடியேற்றவாத காலனித்துவ செயல்முறையில் வேரூன்றியுள்ளன. அங்கு இனச் சுத்திகரிப்பு ஆபத்து பலஸ்தீன சமூகங்களை கட்டாயமாக அகற்றுவதன் மூலம் நிரந்தர மக்கள்தொகை மாற்றத்தை உறுதி செய்யும்” என்று ஒனிடி மேலும்கூறினார்.
இதற்கிடையில் மூன்று அகதி முகாம்களில் நடந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து மூத்த இஸ்ரேலிய இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளை விசாரிக்க மனித உரிமை கண்கானிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.
அதில் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் மத்திய கட்டளையை மேற்பார்வையிடும் மேஜர் ஜெனரல் அவி ப்ளுத் ஆகியோர் அடங்குவர்.
ஆயுதமேந்திய குடியேற்றவாசிகள் சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து விடுபாட்டுரிமயை அனுபவிக்கும் போது, “உங்களை பாதுகாக்க யாரும் வரமாட்டார்கள்” என்ற பலஸ்தீனர்களுக்கான செய்தி மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
கடந்த நூற்றாண்டு முழுவதும் நிரூபிக்கப்பட்ட அனைத்து குற்றங்களிலும் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் முழு ஆதரவையும் இஸ்ரேல் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் குரலற்ற மற்றும் உதவியற்ற பலஸ்தீனர்கள் அரபு சர்வாதிகாரிகளின் ஆதரவை மட்டுமே நாட முடியும். எவ்வாறாயினும் காசாவில் நடந்து வரும் இனப்படுகொலை டிரம்ப்பின் ஒட்டுமொத்த ஆதரவால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நன்கு அறிந்த அரபு சர்வாதிகாரிகள் மேற்குக் கரையை காப்பாற்றவும் ஜனாதிபதி டிரம்பையே நம்பியும் உள்ளனர்.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததும் இதே ட்ரம்ப்தான் என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது.
இதே ட்ரம்பை வரவேற்க பில்லியன் கணக்கான டொலரை செலவிட்ட அரபு சர்வாதிகாரிகளின் வெட்கக்கேடான நிலை இதுதான்.
மேற்குக் கரையைக் காப்பாற்ற ஏதேனும் கணிசமான முன்முயற்சியை இந்த அரபு சர்வாதிகாரிகளால் எடுக்க முடியுமா? என்பதே எஞ்சியுள்ள முக்கியமான கேள்வி .
லத்தீப் பாரூக்

