உலக நாடுகள் சில ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உலகளவில் அதிகரித்துள்ளது. அப்படி ஒரு போர் வெடிக்குமானால், அணுகுண்டுகள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் பலரிடையே காணப்படுகிறது.
இந்த நிலையில், அணுகுண்டு வீசப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, டிக்டாக் சமூக ஊடகத்தில் டெரிக் என அறியப்படும் நிபுணர் ஒருவர் முக்கிய ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். 300 முதல் 800 கிலோடன் திறன் கொண்ட அணுகுண்டு வெடிப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அவர் ஐந்து முக்கிய வழிமுறைகளை விளக்கியுள்ளார்.
1. உடனடியாக தரையில் படுத்துக்கொள்ள வேண்டும்
அணுகுண்டு தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கப்பட வாய்ப்பில்லை என டெரிக் தெரிவிக்கிறார். ஆகவே, வெடிப்பு ஏற்பட்ட உடனே முகம் குப்புற தரையில் படுத்து, குண்டு வெடித்த திசையை நோக்கி கால்களை வைத்துக் கொண்டு, தலையையும் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்.
நுரையீரல் பாதிப்படையாமல் இருக்க வாயை சிறிதளவு திறந்துவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், வெடிப்பை நேரடியாக கண்ணால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
2. உடனே பாதுகாப்பான இடத்துக்குள் செல்ல வேண்டும்
அணுகுண்டு வெடித்த பின், கதிரியக்கத் துகள்கள் தரையில் விழுவதற்கு 10 முதல் 30 நிமிடங்கள் ஆகும். எனவே அந்த நேரத்திற்குள், கட்டிடங்களுக்குள், தரைத்தளத்துக்கும் கீழ் சென்று பாதுகாப்பாக மறைந்துகொள்ள வேண்டும்.
குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருப்பவர்களுக்கு தப்புவது மிகவும் கடினம் என்றும், மூன்று மைல் சுற்றளவில் கண்ணாடி உடைதல் மற்றும் கட்டிட சேதம் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.
3. கட்டிடங்களின் மையப்பகுதியில் பதுங்க வேண்டும்
சுரங்கப்பாதைகள், தரைத்தளத்திற்குக் கீழான அறைகள், செங்கல் அல்லது காங்கிரீட் கட்டிடங்களின் மையப்பகுதி போன்ற இடங்கள் அதிக பாதுகாப்பை வழங்கும். ஜன்னல்கள் மற்றும் வெளிப்புறச் சுவர்களைத் தவிர்த்து இருக்க வேண்டும்.
4. குறைந்தது 72 மணி நேரம் வெளியே வர வேண்டாம்
அணுகுண்டு வெடித்த பின் முதல் 24 மணி நேரம் மிகவும் ஆபத்தானது என டெரிக் கூறுகிறார்.
அரசு பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை, 72 மணி நேரம் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். ரேடியோ இருந்தால், அரசு அறிவுறுத்தல்களை தொடர்ந்து கேட்பது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
5. கதிரியக்கத் துகள்களிலிருந்து பாதுகாப்பு
முடிந்தவரை கட்டிடங்களுக்குள் இருப்பது நல்லது. வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மாஸ்க் அல்லது துணியால் வாயை மூடி, கண்ணாடி மற்றும் கையுறைகள் அணிய வேண்டும்.
கதிரியக்கம் படிந்திருக்கலாம் என சந்தேகப்படும் பொருட்களை தனியாக பார்சல் செய்து வைக்க வேண்டும். பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் முன் உடைகளை மாற்றி, குளித்து செல்ல வேண்டும். குளிக்கும் போது கண்டிஷனர் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் அது கதிரியக்கத் துகள்களை முடியுடன் இணைக்கக்கூடும்.
முன்கூட்டிய தயாரிப்பு அவசியம்
எதிர்பாராத சூழ்நிலை உருவானால் பயன்படுத்துவதற்காக, போதுமான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைத்திருக்க வேண்டும் என டெரிக் அறிவுறுத்துகிறார்.

